கொரோனா கட்டுப்பாடு 75 ஆயிரம் பேரின் உயிரைப் பறிக்கலாம்! – அதிர்ச்சித் தகவல்

Prime Minister, Boris Johnson, Covid tiers finish
(Image: Andrew Parsons/AP)

லண்டன், செப்டம்பர் 26, 2020: கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அடுத்த ஐந்தாண்டுகளில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு இல்லாத மக்களின் உயிரைப் பறிக்கும் வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

கொரோனா தொற்று இங்கிலாந்தில் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் பற்றிய ரகசிய அறிக்கை ஒன்று பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

அரசின் அறிவியல் ஆலோசனைக் குழு இந்த அறிக்கையைத் தயார் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த அறிக்கையில் கொரோனா காலத்தில் மருத்துவமனைகள் முழுக்க முழுக்க கொரோனா நோயாளிகள் மீது கவனம் செலுத்தியதால்

மார்ச், ஏப்ரல் மாதங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு இல்லாத வேறு நோயாளிகள் 16 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் பெரும்பாலும் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டவர்கள். இதய நோய் உள்ளிட்ட வேறு பாதிப்புகளுக்கு அறுவைசிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டவர்கள் ஆவர்.

மருத்துவ பரிசோதனை, தொடர் சிகிச்சை எடுக்க முடியாத காரணத்தால் இவர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 26 ஆயிரம் பேர் இதே காரணங்களால் உயிரிழக்கும் நிலை உள்ளது என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 75 ஆயிரம் பேர் அளவுக்கு உயிரிழப்பை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 41,936 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது அதிர்ச்சித் தகவலாக உள்ளது.

அதே நேரத்தில் ஊரடங்கு காரணமாக காற்று மாசு குறைந்துள்ளது. சாலை விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்தான நோய்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், தோராயமாக ஆண்டுக்கு 4000ம் வரையிலான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா மற்றும் இதர நோய் பாதிப்புகள் காரணமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் பேர் உயிரிழக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் அது 1.5 லட்சம் வரைக்கும் செல்லக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு விதிமுறைகள் அமல்படுத்தப்படாவிட்டால் அடுத்த மாதம் மத்தியில் இங்கிலாந்தில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பேருக்குத் தொற்று கண்டறியப்படலாம் என்றும் உயிரிழப்பு லட்சத்தைத் தாண்டும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter