சிஏஏ-க்கு எதிரான போராட்டம் – பிரிட்டீஷ் எல்லையை ஒருவர் சட்ட விரோதமாக தாண்டினால் என்ன நடக்கும் தெரியுமா?

london live indians protest against india citizenship law
london live indians protest against india citizenship law

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்திலும் திமுக போராட்டங்களை முன்னெடுத்தி நடத்தி வருகிறது.

இந்நிலையில், லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் உள்ள காந்தி சிலையின் முன் திரண்ட லண்டன் வாழ் இந்தியர்கள் ’இந்தியாவின் அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்தனர். நூற்றுக்கணக்கான மாணவர்களும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

CAA மற்றும் NRC சட்டத்தைத் திரும்பப்பெறும் வரையில் போராடுவோம் என அம்மக்கள் உறுதி தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் கூறுகையில், “ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாகவும் லண்டன் பல்கலைக்கழகங்களில் தெற்கு ஆசிய சங்கம் சார்பில் போராட்ட ஊர்வலத்தை முன்னெடுத்துள்ளோம்” என்றார்.

லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன் நடத்தப்பட்ட போராட்டங்களுள் மிகப்பெரிய போராட்டமாக CAA மற்றும் NRC-க்கு எதிரான போராட்டம் உள்ளது. இந்தியப் பணியாளர்கள் கூட்டமைப்பின் சார்பிலும் மத்திய லண்டன் சாலையில் போராட்ட ஊர்வலம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இந்தியத் தூதரகம் சார்பில் விளக்க நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. அதில், குடியுரிமைச் சட்டத்தால் எவ்வித பாதிப்பும் எந்த ஒரு வெளிநாட்டைச் சேர்ந்த மதத்துக்கும் ஏற்படாது. சட்டவிரோதமாகக் குடியேறுவோர்களைத் தடுக்கத்தான் இச்சட்டம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, ஒருவர் சட்ட விரோதமாக பிரிட்டீஷ் எல்லையைத் தாண்டினால் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

ஒருவர் சட்ட விரோதமாக பிரிட்டீஷ் எல்லையைத் தாண்டும் பட்சத்தில், அவர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார். அவரது தண்டனை காலம் முடிந்த பிறகே, அவரது நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்.