குடியுரிமை சட்ட திருத்த மசோதா விவகாரம் – லண்டனில் ஆக்ஸ்போர்டு பல்கலை., மாணவர்கள் போராட்டம்

london oxford university students protest against CAA
london oxford university students protest against CAA

London Tamil News: இந்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. டெல்லி ஜாமியா நகரில் காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து போலீஸார் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து தடியடி நடத்தினர்.

கிழக்கு டெல்லியில் சீலாம்பூரில் உள்ள ஜாபர்பாத் பகுதியில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்திலும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

இதன் எதிரொலியாக லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர்கள் உள்பட பல்வேறு கல்லூரி மாணவர்கள், ‘மாணவர்களின் ஒற்றுமை ஓங்குக’, ‘போலீஸ் அராஜகம் ஒழிக’ போன்ற பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘இந்த போராட்டத்தில் இந்திய வம்சாவளி மாணவர்கள் மட்டுமின்றி பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச மாணவர்களும் பங்குபெற்று உள்ளனர். எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறோம். அவை இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக போலீசாரின் அடக்குமுறை நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும்’, என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

Photo Credits:  The Wire