லண்டன் வடக்கு சர்க்குலர் சாலையில் தண்ணீர் குழாய் வெடிப்பு! – இரவு முழுவதும் நடந்த குழாய் பழுதுநீக்கும் பணி

ண்டன் வடக்கு சர்க்குலர் சாலையில் நேற்று தண்ணீர் குழாயில் திடீர் வெடிப்பு ஏற்பட்டதால் தண்ணீர் சாலையில் மழை வெள்ளம் போல சூழ்ந்தது. இதனால் ஏராளமான வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். இரவு முழுவதும் குழாய் சரிசெய்யும் பணி நீண்டதாக தண்ணீர் விநியோகம் செய்யும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

லண்டன் பேரண்ட் கிராஸ் பகுதியில் தண்ணீர் குழாயில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் முழுவதும் சாலைக்கு வந்தது. கோல்டர்ஸ் கிரீன் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. நாள் முழுக்க தண்ணீர் இன்றி அவதியுற்றதாக மக்கள் வேதனை தெரிவித்தனர். இந்த திடீர் சாலை வெள்ளத்தில் ஏராளமான வாகனங்கள் மாட்டிக் கொண்டன. அந்த பகுதியே வெள்ளக்காடு போல காட்சியளிக்கும் படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “எதனால் இந்த குழாய் வெடிப்பு ஏற்பட்டது என்பது பற்றி எங்கள் பொறியாளர் குழு ஆய்வு செய்து வருகிறது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இதை சரி செய்து வருகின்றனர். வாடிக்கையாளர்களின் நிலை புரிகிறது. இதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்றனர்.

தகவல் அறிந்து மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்க விரைந்து வந்தனர். எட்டுக்கும் மேற்பட்ட கார் ஓட்டுநர்களை அவர்கள் பத்திரமாக மீட்டனர். கார் ஓட்டுநர்களை பத்திரமாக மீட்கும் பணி இரண்டு மணி நேரத்துக்கு மேல் நீண்டது. 25க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த திடீர் வெள்ளம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்தில் சிக்கிக் கொண்டதாக பல கார் ஓட்டுநர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.

குழாய் சரிசெய்யும் பணி இரவு முழுவதும் நடந்ததாக தாமெஸ் வாட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. வடக்கு சர்க்குலர் பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட குழாய் வெடிப்பை இரவு முழுவதும் எங்கள் பொறியாளர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். உங்களுக்கான தண்ணீர் கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இதனால் எந்த அளவுக்கு அசௌகரியம் அடைந்திருப்பீர்கள் என்று நாங்கள் உணர்கிறோம். அனைத்து தண்ணீர் விநியோகமும் இயல்புநிலைக்குத் திரும்பிவிடும். உங்கள் பயணம் எங்களால் தடைப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.