லண்டன் ஹைட் பூங்கா வின்டர் வொண்டர் லேண்ட் ரத்து!

லண்டன் வின்டர் வொண்டர் லாண்டின் கோப்பு படம். (Image: Getty Images/Lonely Planet Images)

லண்டன், 2 செப்டம்பர் 2020: லண்டனில் கடந்த 13 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடத்தப்பட்டு வந்த வின்டர் வொண்டர் லேண்ட் நிகழ்வு இந்த ஆண்டு நடக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு கிறிஸ்துமஸ் உற்சாகத்தை குறைப்பதாக பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

2007ம் ஆண்டில் இருந்து மத்திய லண்டன் ஹைட் பூங்காவில் கிறிஸ்துமஸ் கேளிக்கை சந்தை அமைக்கப்பட்டு வருகிறது.

ஸ்கேட்டிங், ரோலர் கோஸ்டர் என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் உற்சாகப்படுத்தும் மையமாக இது அமைந்திருந்தது.

இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக வொண்டர் லேண்ட் நிகழ்வு நடக்காது என்று அதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

சுகாதார மற்றும் பயண கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள நிலையில் இந்த ஆண்டு நிகழ்ச்சி நடக்காது. ஆனால் 2021 நவம்பரில் மீண்டும் வருவோம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வின்டர் வொண்டர்லேண்ட் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிகவும் கஷ்டமான இதயத்தோடு இந்த முடிவை எடுத்துள்ளோம்.

ஒவ்வொரு சீசனிலும் நாங்கள் வழக்கமாக வரவேற்கும் லட்சக் கணக்கான மக்களுக்கு இந்த செய்தி எவ்வளவு பெரிய ஏமாற்றத்தை அளிக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.

இந்த ஆண்டு நிகழ்வை சாத்தியமாக்க ஏராளமான முயற்சிகள், வியர்வைகள், ஏன் கண்ணீர்த் துளிகளைக் கூட விட்டோம்.  எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி.

அனைவரும் பாதுகாப்பா இருங்கள். அடுத்த ஆண்டில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒன்றுகூடலைச் சந்திக்க இப்போதே ஆவலுடன் உள்ளோம்” என்று கூறியுள்ளனர்.

இந்த நிகழ்வு ஏற்பாடு செய்வதன் மூலம் ஏராளமானோர் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஹாஸ்பெட்டாலிட்டி துறைக்கு மிகப்பெரிய பாதிப்பாக கருதப்படுகிறது.

ஏற்கனவே கொரோனா பாதிப்பு காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் மேலும் நெருக்கடி வருவதாக உணவு, பயண ஏற்பாடு போன்ற சேவைத் துறையினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக எதிர்பார்த்த ஒன்று என்றாலும், இது கிறிஸ்துமஸ் உற்சாகத்தை குறைக்கும் வகையில் உள்ளது என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter