லண்டன்: தற்காப்புக்காக மூன்று பேரை கொன்ற இந்தியர் விடுதலை!

தாக்குதல் நடந்த இடம். (Imag: PA/dailymail.co.uk)

லண்டன், அக்டோபர் 18, 2020: இங்கிலாந்தில் முதன் முறையாக மூன்று கொலை செய்தவர், தற்காகப்புக்காகத்தான் செய்தார் என்ற காரணத்தால் தண்டனை எதுவும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 19ம் தேதி கிழக்கு லண்டன் இல்ஃபோர்ட் பகுதியில் உள்ள சீக்கியர்களின் வழிபாட்டுத் தளத்தில் இருந்து குர்ஜித் சிங் வெளியே நடந்து வந்து கொண்டிருந்தார். அவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் பின் தொடர்ந்து வந்துள்ளது.

செவன் கிங்ஸ் ரயில் நிலையம் அருகே குர்ஜித் சிங் வந்த போது குர்ஜிந்தர் சிங்கை அந்த கும்பல் தாக்கத் தொடங்கியது.

உயிரைத் தப்பிக்க சில மீட்டர் தூரம் அவர் ஓடியுள்ளார். ஒரு சந்து பகுதியில் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

பதில் தாக்குதலில் குர்ஜித் சிங் ஈடுபட்டதில்  ஹரிந்தர் குமார் (22), நரிந்தர் சிங் (26), பல்ஜித் சிங் (34) ஆகியோர் உயிரிழந்தனர். சந்தீப் சிங் என்பவர் காயம் அடைந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் குர்ஜித் சிங் மற்றும் சந்தீப் சிங்கை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

கொலை செய்யப்பட்ட மூவர்!

அப்போது, நான்கு பேர் சேர்ந்து குர்ஜித் சிங்கை தாக்கியதும், அவர் தப்பிக்க ஓடியதும் தெரியவந்துள்ளது.

ஒரு கட்டத்தில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் திருப்பி தாக்கியுள்ளார். 13 விநாடிகள் திருப்பி தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்தது தெரியவந்தது.

குர்ஜித் சிங் உடலிலும் பலமான கத்திக் குத்து காயங்கள் இருந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அவரது தலை, நெற்றிப் பகுதியில் ஆழமான வெட்டுக் காயம் ஏற்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து குர்ஜித் சிங் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. பொது இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியதாக மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதே நேரத்தில் உயிர் தப்பிய சந்திப் சிங் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தொழில் போட்டி, பண விவகாரம் உள்ளிட்ட காரணங்களால் நான்கு பேர் சேர்ந்து குர்ஜித் சிங்கை தாக்கியது விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கை லண்டன் ஸ்னாரெஸ்ப்ரூக் கிரவுன் நீதிமன்றம் விசாரணை நடத்திவந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் குர்ஜித் சிங் குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் உறுதி செய்தது.

அதே நேரத்தில் உள் நோக்கத்துடன் காயத்தை ஏற்படுத்தியதாக சந்திப் சிங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் தண்டனை அனுபவித்து வெளியே வந்ததும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரது சகோதரர் ஹர்பிரீத் (27) ஒரு வருட சிறை தண்டனை அனுபவித்த பிறகு இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்.

மூன்று கொலைகள் செய்திருந்தும், கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் இன்மை, தற்காப்புக்காக தாக்கியது உள்ளிட்ட காரணங்களால் குர்ஜித் சிங் தண்டனை எதுவும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து வரலாற்றில் கொலை செய்த ஒருவர் தண்டனை எதுவும் இன்றி விடுதலையாவது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter