லண்டன்: கொரோனா தொற்று இருக்கிறது துப்பிவிடுவேன் என்று அதிகாரிகளை அச்சுறுத்தியவருக்கு ஓராண்டு சிறை!

சிறை தண்டனை பெற்ற ஜேசன் கிரிட்டன் (Image: news.met.police.uk)

லண்டனில் தனக்கு கொரோனா தொற்று உள்ளது, அருகில் வந்தால் மேலே துப்பிவிடுவேன் என்று போலீசாரை மிரட்டிய நபருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

லண்டன் சென்ட்ரல் ஹில் பகுதியைச் சேர்ந்தவர் ஜேசன் கிரிட்டன் (45). வாகனம் ஓட்டியதில் சட்ட மீறல் தொடர்பாக லண்டன் போலீசார் அவரை தேடி வந்தனர். கடந்த ஏப்ரல் 30ம் தேதி கிரிட்டனை கண்டறிந்து அவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்திய போது, தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது. என்னைப் பிடித்தால் போலீசார் மீது எச்சில் உமிழ்ந்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

அத்துடன் நிறுத்தாமல் மிகப்பெரிய கத்தி ஒன்றையும் எடுத்துக் காட்டி, கொலை செய்துவிடுவேன் என்று போலீஸ் அதிகாரிகளை மிரட்டினார். வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து போலீஸ் அதிகாரிகள் மீது வீசி தாக்குதல் நடத்தினார்.

இதைத் தொடர்ந்து சிறப்புப் பேச்சுவார்த்தை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். நீண்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு ஜேசன் கிரிட்டன் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது, போலீசார் மீது தாக்குதல் நடத்தியது, கொரோனா நோய் உள்ளதாக கூறி போலீசார் மீது எச்சில் உமிழ்ந்துவிடுவேன் என்று மிரட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர் மீது பதிவு செய்யப்பட்டது. இவர் மீதான குற்றச்சாட்டுக்களை போலீசார் உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து குரோய்டன் கிரவுன் நீதிமன்றம் ஜேசன் கிரிட்டன் குற்றவாளி என்று கடந்த செவ்வாய்க் கிழமை (4ம் தேதி) உறுதி செய்தது.

ஜேசனுக்கு இன்று குரோய்டன் கிரவுன் நீதிமன்றம் தண்டனை வழங்கியது. அதிகாரிகளை அச்சுறுத்திய அவருக்கு 12 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மெட் சாலை மற்றும் போக்குவரத்து காவல் துறை கமாண்ட் தலைமை ஆய்வாளர் டேவிட் மாங்க் கூறுகையில், “அவசர கால பணியாளர்கள் மீதான தாக்குதல், வன்முறையை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நீதிமன்ற நடவடிக்கை மூலமாக அவருக்கு அதிகபட்ச தண்டனை வாங்கித் தரப்பட்டுள்ளது” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk