2 பெண்களை கொன்று ஃப்ரீசரில் வைத்தவனுக்கு 38 ஆண்டு சிறை!

London, murdering
கொலை செய்யப்பட்ட பெண்களின் படங்கள் (Image: news.met.police.uk)

லண்டன், 5 செப்டம்பர் 2020: இரண்டு பெண்களை கொன்று அவர்களின் உடல் பாகங்களை ஃப்ரீசரில் வைத்திருந்த சைக்கோ கொலைகாரனுக்கு லண்டன் நீதிமன்றம் 38 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கிழக்கு லண்டன் கேனிங் டவுனில் உள்ள ஜாகித் யூனுஸ் என்பவன் வீட்டுக்குள் சந்தேகத்தின் பேரில் நுழைந்த போலீசார் அங்கு மறைவாக இருந்த ஃப்ரீசரில் மனித உடல் பாகங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

விசாரணையில் அந்த உடல்கள் 36 வயதான ஹென்றிட் சூக்ஸின் மற்றும் மிஹ்ரிகன் முஸ்தபா (38) ஆகியோரது உடல் என்பது தெரியவந்தது. 2016ம் ஆண்டு யூனுஸ் உடன் ஹென்றிட் சூக்ஸ் வெளியே சென்றார்.

சிறை தண்டனை பெற்ற யூனுஸ் (Image: news.met.police.uk)

அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அதே போல் 2018ம் ஆண்டு கேனிங் டவுனில் உள்ள யூனுஸ் வீட்டுக்கு மிஹ்ரிகன் முஸ்தபா செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

அதன் பிறகு அவரும் வீடு திரும்பவில்லை. இவர்கள் இருவரும் காணாமல் போனதாக போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் 2019 ஏப்ரல் 26ம் தேதி போலீசார் யூனுசின் வீட்டில் சோதனையிட வந்தனர்.

அப்போது ரகசிய அலமாரியில் இருந்த ஃப்ரீசலில் மனித உடல்கள் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.

வீட்டில் சிந்திக் கிடந்த பெண்களின் ரத்தம் இருந்த இடங்கள் (Image: news.met.police.uk)

இறந்தது சூக்ஸ் மற்றும் முஸ்தபா என்பதை டி.என்.ஏ ஆய்வு மூலம் உறுதி செய்தனர். சூக்ஸை கொலை செய்துவிட்டு அவரிடமிருந்து எடுத்த பணத்தைக் கொண்டு அந்த ஃப்ரீசலை யூனுஸ் வாங்கியிருப்பதும் தெரிந்தது.

அந்த உடல்களை ஆய்வு செய்தபோது மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, எலும்புகள் உடைக்கப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டு அவர்களின் உயிர் பறிக்கப்பட்டது தெரியவந்தது.

யூனுஸ் வீட்டில் இருந்து உடலின் மிச்சங்கள் கண்டறியப்பட்டாலும், தான் கொலை செய்யவில்லை என்று சாதித்து வந்தார்.

ஆனால், அந்த இரு பெண்களின் உடல் எச்சம், வீட்டு தரை விரிப்பில் சிந்தியிருந்த இரு பெண்களின் ரத்தத் துளிகள், இரு பெண்களின் மொபைல் போன் சிக்னலும் கடைசியாக யூனுஸ் வீட்டில் நிறுத்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு வலுவான ஆதாரங்கள் யூனுக்கு எதிராக இருந்தன.

இந்த வழக்கில் யூனுஸ் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருந்தான். அவனுக்கான தண்டனைகளை சௌத்வாக் கிரவுன் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறைந்தபட்சம் 38 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தண்டனை வழங்கிய நீதிபதி சீமா க்ரூப், இவனை வெளியே வராமல் பார்த்துக்கொள்வது நல்லது என்றும் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter