பஸ்ஸில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை… கொடூரனுக்கு 4 ஆண்டு சிறை!

London Bus
லண்டன் பஸ் - மாதிரி படம் (Image: Youtube)

லண்டன், 4 செப்டம்பர் 2020: ஓடும் பஸ்ஸில் பள்ளி சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கி தன்னுடைய வீரத்தைக் காட்டிய கொடூர இளைஞனுக்கு லண்டன் நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் தேதி ஹவுன்ஸ்லோவில் ரூட் எச்91 பஸ்ஸில் பள்ளி மாணவி ஒருவர் சென்று கொண்டிருந்தார்.

அந்த பஸ்ஸில் பயணித்த இளைஞன் ஒருவன் அந்த பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

அந்த இளைஞனை எதிர்கொள்ள முடியாமல் அந்த சிறுமி விண்ட்மில் சாலையில் உள்ள ஒரு நிறுத்தத்தில் இறங்கினார்.

அப்போது அதே இளைஞன் அந்த சிறுமியை அடித்து காயப்படுத்தினான். சாலையில் பாலியல் ரீதியாக வன்கொடுமைகளையும் செய்தான்.

இதில் அந்த சிறுமியின் முகத்தில் காயம் ஏற்பட்டது. அந்த சிறுமி சத்தம்போடவே அந்த இளைஞன் அங்கிருந்து நகர்ந்தான்.

இது குறித்து லண்டன் சாலை மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு 2019 செப்டம்பர் 29 பிற்பகல் 2.55 மணி அளவில் புகார் வந்தது.

அவர்கள் விரைந்து வந்து அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அவருக்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன.

அந்த சிறுமி அளித்த தகவல் அடிப்படையில் அந்த பகுதியில் உள்ள காவலர்கள் எச்சரிக்கப்பட்டனர். சிறுமியை தாக்கிய இளைஞனை நகரம் முழுவதும் போலீசார் தேடினர். ஆனாலும் அந்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை. தேடுதல் வேட்டை தொடர்ந்து கொண்டே இருந்தது.

சிறை தண்டனை விதிக்கப்பட்ட இளைஞன். (Image: met.police.uk)

இந்த நிலையில் சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆன நிலையில் 2019 அக்டோபர் 23ம் தேதி லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்துக்கு செல்லும் பஸ்ஸில் சந்தேகத்துக்குரிய இளைஞர் ஒருவரை போலீசார் கண்டனர். அவரைப் பின்தொடர்ந்து சென்றனர். ஹீத்ரு விமானநிலையத்தில் அந்த இளைஞரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவன் பெயர் ஆடம் ஜெபி (வயது 24) என்றும், அவன்தான் பள்ளி சிறுமியை தாக்கியவன் என்பதும் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து உடனடியாக போலீசார் கைது செய்து அவனை ஆக்ஸ்பிரிட்ஜ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு 2019 அக்டோபர் 25ம் தேதி அவன் மீது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது, காயம் ஏற்படுத்தும் தாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டுக்களை அந்த இளைன் ஒப்புக்கொண்டான்.

இந்த வழக்கில் ஐஸ்லெவொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் தண்டனை அறிவிக்கப்பட்டது. அவனுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட லைசன்ஸ் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter