லண்டன்: பஸ் ஓட்டுநர் முகத்தில் உமிழ்ந்த நபருக்கு ஜெயில் தண்டனை!

London Bus
லண்டன் பஸ் ஒட்டுநர்... மாதிரி புகைப்படம்! (Image: EPA/Andy Rain)

லண்டன், 1 செப். 2020: லண்டனில் போக்குவரத்து சிக்னலில் கதவைத் திறக்க மறுத்த பஸ் டிரைவர் முகத்தில் உமிழ்ந்த நபருக்கு லண்டன் நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த மே மாதம் 13ம் தேதி அதிகாலை 4.30 மணி அளவில் லட்கேட் சர்க்கஸ் போக்குவரத்து சிக்னல் அருகே என்11 பஸ்  வந்து நின்றது.

அப்போது 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வந்து பேருந்தின் கதவைத் திறக்கும்படி கேட்டுக்கொண்டார்.

போக்குவரத்து சிக்னலில் கதவைத் திறப்பது தவறு. அருகில் உள்ள பஸ் நிறுத்தத்துக்குச் செல்லும்படியும், அங்கு வந்து அவரை அழைத்துக்கொள்வதாகவும் அந்த ஓட்டுநர் கூறியுள்ளார்.

இதை ஏற்க மறுத்த அந்த நபர் திறந்திருந்த ஜன்னல் வழியாக அந்த ஓட்டுநரின் முகத்தில் எச்சில் உமிழ்ந்தார்.

உடனடியாக அவர் ஜன்னல் கண்ணாடியை மூடவே, அதன் மீதும் தொடர்ந்து எச்சில் உமிழ்ந்துள்ளார்.

தன்னுடைய வண்டியில் வைத்திருந்த ஸ்பிட் கிட்டை எடுத்து அந்த நபரின் உமிழ் நீர் மாதிரியைச் சேகரித்தார் அந்த ஓட்டுநர். பின்னர் இது குறித்து லண்டன் நகர போலீசில் புகார் செய்தார்.

சிசிடிவி கேமரா உள்ளிட்ட ஆதாரங்களை வைத்து தவறான செய்கையில் ஈடுபட்ட நபர் பெயர் கெவின் சிம்சன் என்பதும், அவர் லூயிஷாம் ப்ரோக்லி சாலையைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவரைத் தேடி போலீசார் அவரது வீட்டுக்குச் சென்றனர். அவர் வீட்டில் இல்லை. இந்த நிலையில் பிஷப்கேட்ஸ் காவல் நிலையத்தில் அவராக சரண் அடைந்தார்.

அவரது குற்றம் உறுதி செய்யப்படவே லண்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கெவின் சிம்சனுக்கு 18 வார சிறை தண்டனை வழங்கியுள்ளது.

இது குறித்து லண்டன் போலீஸ் குற்ற புலனாய்வு பிரிவு (சி.ஐ.டி) பிரிவு கான்ஸ்டபிள் டேவிட் ஹோம்ஸ் இது குறித்து கூறுகையில், “நடந்த சம்பவம் எவ்வளவு மோசமானது என்பதை இந்த தீர்ப்பு நமக்கு காட்டுகிறது. கொரோனாத் தொற்று தீவிரமாக இருந்த காலகட்டத்தில் சிம்சன் இதுபோன்ற மோசமான செயலை செய்துள்ளார். இந்த விஷயத்தில் ஓட்டுநரைப் பாராட்ட வேண்டும். தாம் தாக்கப்பட்டது பற்றி கவலை கொள்ளாமல் எச்சில் மாதிரியைச் சேகரித்து அளித்து குற்றவாளியைக் கண்டறிய பெரிதும் உதவியாக இருந்துள்ளார்.

தங்கள் பணியை செய்யும் யாரும் பயப்படத் தேவையில்லை. குறிப்பாக இது போன்ற அருவருப்பான முறையில் தாக்கப்படுவது தொடர்பான அச்சம் அதிகரித்து வரும் நிலையில் நமது தனிப்பட்ட ஆரோக்கியம் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். இது போன்ற நிகழ்வுகளைத் தீவிரமாக எடுத்து, இதுபோன்ற குற்றம் செய்பவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் என்று மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter