காதலியின் முன்னாள் துணைவரை கொடூரமாக கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை!

சிறை தண்டனை பெற்ற ராபர்ட் பார்கின்ஸ். (Image: Cambridgeshire Police)

கேம்பரிட்ஜ்ஷேயர், 24 ஆகஸ்ட் 2020: தன்னுடைய காதலியின் முன்னாள் பார்ட்னரை 17க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த இளைஞருக்கு 19 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஈட்டன் சோகோனின் டாரிங்டன் க்ளோஸைச் சேர்ந்தவர் 33 வயதான ராபர்ட் பார்கின்ஸ். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 13ம் தேதி கேம்பிரிட்ஜஷேயரின் செயினட் நியோட்ஸில் உள்ள தன்னுடைய காதலியின் வீட்டில் இருந்தார். அப்போது, காதலியின் முன்னாள் துணைவர் அலெக்ஸ் ஃபிட்ஸ்பாட்ரிக் (30) தன் மகன் தவறவிட்ட கண்ணாடியைக் கொடுப்பதற்காக அங்கு வந்தார்.

அப்போது ஃபிட்ஸ் பாட்ரிக்குக்கும் அவரது முன்னாள் துணைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அலெக்ஸ் கண்ணாடியைக் கொடுக்காமல் தன் முன்னாள் துணைவியிடம் சண்டை போட்டதாக தெரிகிறது. அப்போது காதலிக்கு ஆதரவாக, வீட்டில் இருந்த ராபர்ட் பார்கின்சும் அலெக்சுடன் சண்டை போட்டுள்ளார்.

இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த ராபர்ட் பார்கின்ஸ் சமையல் அறைக்குச் சென்று கத்தியைக் கொண்டு வந்து அலெக்ஸ் ஃபிட்ஸ்பாட்ரிக் மீது சரமாரியாகக் குத்தினார். அலெக்சின் நெஞ்சு மற்றும் கழுத்துப் பகுதியில் மட்டும் 17க்கும் மேற்பட்ட கத்திக்குத்து விழுந்துள்ளது. ஒரு சில நிமிடங்களில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட ராபர்ட் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

கொலை செய்யப்பட்ட அலெக்ஸ். (Image: Cambridgeshire Police)

கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து சோதித்துவிட்டு ஃபிட்ஸ் பாட்ரிக் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவித்தனர். உடற்கூறு ஆய்வில், கழுத்து, நெஞ்சுப் பகுதியில் 17க்கும் மேற்பட்ட கத்திக்குத்தும் விழுந்ததாகத் தெரியவந்தது. ஒவ்வொன்றும் இரண்டு இன்ச் அளவுக்கு ஆழமாக இறங்கியுள்ளது. அதுவே அவரது மரணத்துக்குக் காரணமாகிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தப்பி ஓடிய பார்கின்ஸ் தன்னுடைய சகோதரியின் வீட்டில் தஞ்சம் புகுந்தார். லண்டனில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஓல்ட் பெய்லியில் நடந்து வந்தது. கடந்த 20ம் தேதி இந்த வழக்கில் பார்கின்ஸ் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். அவருக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நிராயுதபாணியாக நின்ற மனிதரைக் கத்தியால் குத்திய பார்கின்சனுக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் போது ஃபிட்ஸ் பாட்ரிக், கொலையாளி பார்கின்ஸின் தலையில் ஹெல்மெட்டால் பயங்கரமாகத் தாக்கினார். அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கோபத்தில் செய்துவிட்டார் என்று அவர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால், இதை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk