லண்டனில் ஓடும் பஸ்ஸில் பாலியல் சேட்டை செய்த நபருக்கு சிறை!

(Image: thespec.com)

லண்டன், அக்டோபர் 14, 2020: லண்டனில் ஓடும் பஸ்ஸில் பெண்கள் பார்க்கும்படி சில்மிஷத்தில் ஈடுபட்ட நபருக்கு 16 வார சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெற்கு லண்டன் மெல்போர்ட் சாலையைச் சார்ந்தவர் பாபி கராண்டே (27). இவர் கடந்த மே மாதம் 27ம் தேதி க்ரோண்டனில் இருந்து நோர்பரிக்கு ரூட் 50 பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த பஸ்ஸில் அவருக்கு எதிரே இரண்டு பெண்கள் வந்து அமர்ந்துள்ளனர். இரண்டு குழந்தைகளுடன் வந்த பெண்மணி ஒருவர் கராண்டேவுக்கு அருகே காலியாக இருந்த இடத்தில் அமர்ந்துள்ளனர்.

அப்போது கராண்டே தன்னுடைய ஆடைக்கு மேல் பாலியல் ரீதியான செய்கையில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த பெண்கள் அதிர்ச்சியடைந்து முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.

ஆனால், எதைப் பற்றியும் கவலைப் படாத அந்த நபர், தன்னுடைய செய்கையை முடித்துக் கொண்டு நார்பெர்ரி ரயில் நிலையம் நிறுத்தத்தில்  சாவகாசமாக இருந்து இறங்கிச் சென்றார்.

இது குறித்து பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் போலீசில் புகார் செய்தனர். பஸ்ஸில் இருந்த சிசிடிவி காமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், பெண்களுக்கு முன்பாக பாபி பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டதை உறுதி செய்தனர்.

ஏற்கனவே இது போன்ற குற்றச் செயலில் ஈடுபட்ட நபர் என்பதால் பாபி கராண்டேவை கைது செய்து ரிமாண்ட் செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் தன் மீதான குற்றச்சாட்டை பாபி கராண்டே ஒப்புக் கொண்டார். இதன் அடிப்படையில் பாபிக்கு 16 வாரங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பாலியல் சேட்டையில் ஈடுபட்ட நபர் (Image: Met Police)

இது குறித்து விசாரணை மேற்கொண்ட சாலை போக்குவரத்து கமாண்ட் பி.சி ஆண்டி மோர்லாண்ட் கூறுகையில், “இந்த நபருக்கு தண்டனை வழங்கப்படுவது இது முதன் முறை இல்லை. அவனுக்கு 16 வார சிறை தண்டனை வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி.

பேருந்துகளில் இது போன்ற பாலியல் செயல்பாடுகள் நடப்பது அரிதானது. இப்படி பொது இடத்தில் ஆபாசமாக செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது மக்களுக்கு நாங்கள் உறுதி அளிக்கிறோம்.

இந்த வழக்கில் எங்களுக்கு சிசிடிவி கேமரா காட்சிகள் முக்கிய சாட்சியாக அமைந்திருந்தது. சிசிடிவி கேமரா எங்களுக்கு வலுவான ஆயுதமாக அமைந்திருந்தது.

பஸ்ஸில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது சரியானது என்று நினைக்கும் ஒவ்வொருவரையும் நாங்கள் இந்த வலிமையான ஆயுதம் மூலம் தடுத்து நிறுத்துவோம்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter