யார்க்‌ஷேயர்: 36 டிகிரி வெயிலில் காருக்குள் நாயை பூட்டிச் சென்ற கொடூர உரிமையாளர்!

கார் ஜன்னல் கண்ணாடியை உடைத்து நாயின் உயிரைக் காப்பாற்றிய நபர் (IMAGE: Credit: SAMANTHA HEAVER/ FACEBOOK)

யார்க்‌ஷேயரில் கொளுத்தும் 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் காருக்குள்ளேயே செல்ல நாயை வைத்து பூட்டிவிட்டு சென்ற நபருக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஹீரோ போல் வந்து காப்பாற்றிய நபரைப் பாராட்டி வருகின்றனர்.

இங்கிலாந்தில் கோடைக் காலம் உச்சத்தில் உள்ளது. மக்கள் வெயில் கொடுமையைத் தவிர்க்கக் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு விரைந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் யார்க்‌ஷேயர் நியூபெர்ரி கரிஸ் பிசி வேர்ல்ட் அருகே கடந்த 10ம் தேதி ஒரு கார் வந்து நின்றது. அந்த காரில் இருந்து ஏதோ சத்தம் கேட்கவே அந்த பகுதியில் சென்றவர்கள் உள்ளே என்ன உள்ளது என்று பார்த்துள்ளனர். கொதிக்கும் 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் கார் விண்டோ முற்றிலுமாக மூடப்பட்ட நிலையில் உள்ளே நாய் ஒன்று இருந்துள்ளது.

அந்த கார் யாருடையது என்று அப்பகுதியில் மக்கள் விசாரித்துள்ளனர். நேரம் ஆக ஆக நாய் சோர்ந்து போனது. யாராவது வருகிறார்களா என்று பொது மக்களும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். 45 நிமிடங்களுக்கு மேலாக யாரும் வராத நிலையில், ஒருநபர் கோடாரியோடு வந்து கார் கண்ணாடியை உடைத்தார்.

கடைசியில் அந்த நாய் இயற்கை காற்றை சுவாசித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டது. இதற்குள்ளாக இரண்டு போலீசாரும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் நாயை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், “நல்ல வேலையாக அந்த மனிதர் காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்தார். இல்லை என்றால் அந்த நாய் இறந்தே போயிருக்கும். இந்த கார் உரிமையாளர் இனி செல்லப்பிராணிகள் வளர்ப்பதைத் தடை செய்ய வேண்டும். கார் கண்ணாடியை உடைத்த நபருக்கு அரசு விருது வழங்க வேண்டும்” என்றனர்.

Posted by Samantha Heaver on Monday, August 10, 2020

காரை ஓட்டி வந்த பெண்மணியும் அவரது மகளும் அருகில் உள்ள ஷாப்பிங் சென்டரில் பொருட்களை வாங்கச் சென்றுள்ளனர். நாயை உள்ளே கூட்டி செல்ல முடியாத நிலையில் காரிலேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர். ஷாப்பிங் முடித்துவிட்டு வந்த பெண், உள்ளே சென்று 20 நிமிடத்தில் வந்துவிட்டதாக போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால், 45 நிமிடத்துக்கும் மேலாக கார் அங்கேயே உள்ளது என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தேம்ஸ் வேலி போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “காரின் கண்ணாடியை பொது மக்களில் ஒருவர் உடைத்து நாயை வெளியே கொண்டு வர உதவினார். இந்த சம்பவம் கேள்வியுற்றதும் இரண்டு போலீசார் அங்கு விரைந்தனர். கார் உரிமையாளருக்கு இனி இதுபோன்று நடக்காமல் இருக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன” என்றார்.

நாயைக் காப்பாற்ற ஜன்னல் கண்ணாடியை உடைத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் கார் உரிமையாளருக்கு எதிராக கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk