சர்ரே: கேஎஃப்சி சிக்கன் வாங்க சென்றவர் கோமாவுக்கு சென்ற பரிதாபம்! – 2 பேர் கைது

KFC, கே.எஃப்.சி
சர்ரே வால்டன் -ஆன்- தேம்ஸ் ஹை ஸ்ட்ரீட்டில் உள்ள கே.எஃப்.சி (Image: Google Street)

சர்ரே, 30 ஆகஸ்ட் 2020: கேஎஃப்சி சிக்கன் வாங்க வந்த 50 வயது மதிக்கத்தக்கவருக்கும் மூன்று இளைஞர்களும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இளைஞர்கள் தாக்கியதில் 50 வயது நபர் கோமாவுக்கு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்ரே வால்டன் -ஆன்- தேம்ஸ் ஹை ஸ்ட்ரீட்டில் உள்ள கே.எஃப்.சி சிக்கன் ரெஸ்டாரண்டுக்கு 50 வயது மதிக்கத்தக்க நபர் நேற்று மாலை உணவு சாப்பிட வந்தார். அப்போது அங்கு இருந்த மூன்று இளைஞர்களுக்கும் அந்த நபருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வாய்த்தகராறு முற்றிக் கைகலப்பில் நான்கு பேரும் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் மூன்று பேர் சேர்ந்து தாக்கியதில் அந்த 50 வயது நபர் காயம் அடைந்தார். அவரை வெளியே இழுத்து வந்து சாலையில் தள்ளிவிட்டு மூன்று இளைஞர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சண்டையை விலக்கிவிட்டு அந்த நபரைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

மாலை 5.45 மணி அளவில் கே.எஃப்.சி ரெஸ்டாரண்டில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாகவே அனைத்தும் முடிந்துவிடவே, மயங்கிக் கிடந்த நபரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்தனர்.

மருத்துவக் குழுவினர் வந்து அவரை பரிசோதித்த போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதும், அதனால் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக தெரிவித்தனர். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த நபர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பற்றிய தகவல் அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணையில் இறங்கிய போலீசார் 50 வயது மதிக்கத்தக்க நபரைத் தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். மேலும், ஒருவரைத் தேடி வருகின்றனர்.

இது குறித்து வழக்கை விசாரித்து வரும் சார்ஜென்ட் ஆண்டனி பிரஸ்டன் கூறுகையில், “உணவகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி எப்போதும் பிஸியான இடம். எனவே, பலரும் நடந்த சம்பவத்தை பார்த்திருக்கலாம். விவரம் அறிந்தவர்கள் இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கடை மற்றும் அந்த பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்.

மேலும் சம்பவம் நடந்த போது ஆர்டர் டெலிவரி செய்ய அங்கிருந்து புறப்பட்டவர்கள் யாராவது இருந்தால் அவர்களுடன் விசாரணை நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம். அவர்கள் வாகனத்திலிருந்த டேஷ் கேமரா அல்லது ஹெல்மெட் கேமரா மூலம் மேலும் விவரம் கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk