நான்கு நிலை கொரோனா கட்டுப்பாடு புதிய வகை வைரஸை கட்டுப்படுத்த உதவாது! – ஹென்காக்

situation, end, lockdown, கொரோனா, ஊரடங்கு, London move tier
(Image: PA Media)

தற்போது நடைமுறையில் உள்ள நான்கு நிலை கட்டுப்பாடுகள் புதிய வீரியம் மிக்க கொரோனா வைரஸ் கிருமி பரவலைக் கட்டுப்படுத்த உதவாது என்று சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் அறிவித்துள்ளார்.

புதிய வகை வீரியம் மிக்க கொரோனா வைரஸ் இங்கிலாந்து மக்களின் வாழ்வை ஒட்டுமொத்தமாக திருப்பிப் போட்டுள்ளது.

இனி முழு ஊரடங்கு இருக்காது என்று கூறப்பட்டு வந்த நிலையில் லண்டன் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நான்காம் நிலை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

நான்காம் நிலை ஊரடங்கு என்பது நவம்பர் மாதத்தில் இருந்த முழு ஊரடங்கை ஒத்தது. மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த சூழலில் இங்கிலாந்தில் நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நபர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

புதன்கிழமை மட்டும் 39,237 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 744 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் டவுனிங் ஸ்ட்ரீட் பத்திரிகையாளர் சந்திப்பை சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் மேற்கொண்டார்.

அப்போது, “யு.கே-வில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் பழைய நிலை கட்டுப்பாடுகள் புதிய வீரியம் மிக்க வைரஸ் கிருமி பரவலைக் கட்டுப்படுத்த உதவாது.

கடந்த ஒரு வாரத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 57 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாத மத்தியிலிருந்தது போன்று தற்போது அதிகரித்துள்ளது.

இதனால் கிழக்கு மற்றும் தென் கிழக்கு இங்கிலாந்தின் மேலும் பல பகுதிகளில் நான்காம் நிலை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.

சசெக்ஸ், ஆக்ஸ்ஃபோர்டு ஷையர், சஃபோல்க், நோர்ஃபோக், கேம்பிரிட்ஷையர், ஹாம்ப்ஷயர் ஆகியவை பாக்சிங் டே அன்று நான்காம் நிலை ஊரடங்குக்குள் செல்கின்றன.

பிரிஸ்டல், க்ளூசெஸ்டர்ஷையர், சோமர்செட், வடக்கு சோமர்செட் கவுன்சில், ஸ்விண்டல், ஐல் ஆஃப் வைட், நியூ ஃபாரஸ்ட், நார்தம்ப்டன்ஷையர், செஷயர், வாரிங்டன் ஆகியவை இரண்டாம் நிலையில் இருந்து மூன்றாம் நிலைக்குச் செல்கின்றன.

கார்ன்வால் மற்றும் ஹியர்ஃபோர்ட்ஷையர் ஆகியவை இரண்டாம் நிலைக்குச் செல்கிறது” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter