95 சதவிகிதம் அளவுக்கு பலன் அளிக்கும் திறன் கொண்ட மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு இங்கிலாந்து அனுமதி வழங்கியுள்ளது.
உலகிலேயே முதன் முறையாக கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிய நாடு இங்கிலாந்து. ஃபைசர் – பயோஎன்டெக் தயாரித்த தடுப்பூசிக்கு முதன் முறையாக இங்கிலாந்துதான் அனுமதி வழங்கியது.
அதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம் தயாரித்த ஆஸ்ட்ரா ஜெனிக்கா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது மூன்றாவதாக அமெரிக்க நிறுவனமான மார்டனா தடுப்பூசிக்கு இங்கிலாந்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை செயலாளர் மாட் ஹென்காக் கூறுகையில், “மோசமான நோயை எதிர்கொள்ள நமக்கு மேலும் ஒரு ஆயுதம் கிடைத்துள்ளது” என்றார்.
முதலில் 70 லட்சம் மார்டனா தடுப்பூசியை வாங்க இங்கிலாந்து அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது அதை ஒரு கோடியாக உயர்த்தி உள்ளது.
ஏற்கனவே ஃபைசர், ஆஸ்ட்ரா தடுப்பூசிகள் இங்கிலாந்தில் போடப்பட்டு வரும் நிலையில், மார்டனா வரவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மொத்தத்தில் 367 மில்லியன் டோஸ்களை இங்கிலாந்து அரசு வாங்கியுள்ளது.
இதுவரை 1.5 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் அதிக அளவில் விரைவாக கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதைப் படிச்சீங்களா: கோவிட்-19 இரண்டாம் கட்ட தடுப்பூசி தாமதம் ஏன்? – அமைச்சர் விளக்கம்
ஃபைசர் பயோஎன்டெக் தடுப்பூசி போலவே மாடர்னா தடுப்பூசியும் ஆர்.என்.ஏ வகை தடுப்பூசியாகும். அதே நேரத்தில் ஃபைசர் போல இதற்கு மைனஸ் 70 டிகிரி வெப்பநிலை தேவையில்லை, மைனஸ் 20 டிகிரி வெப்பநிலையில் பாதுகாப்பாக வைத்தாலே போதும்.
இதன் மூலம் சாதாரண மருத்துவ குளிர்விப்பானே போதுமானதாக உள்ளது. எளிதில் இதைக் கொண்டு வரவும், இருப்பு வைக்கவும் முடியும்.
மார்டனா தடுப்பூசி தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், தடுப்பூசி போடப்பட்டவர்களில் 95 சதவிகிதம் பேருக்கு இது பாதுகாப்பை வழங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அதிக அளவில் பயனுள்ளதாக இருக்கும்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே மார்டனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…