லண்டன்: திருடிய சைக்கிளை ஆன்லைனில் விற்க முயற்சி… இருவர் கைது!

கைப்பற்றப்பட்ட சைக்கிள்கள் (Image:news.met.police.uk)

லண்டனில் பல பகுதிகளில் திருடப்பட்ட இருசக்கர வாகனங்களை ஆன்லைனில் விற்பனை செய்ய முயன்ற இருவரை மெட் போலீசார் கைது செய்துள்ளனர்.

லண்டனில் பல இடங்களில் சைக்கிள் திருட்டு சர்வ சாதாரணமாக நடக்கிறது. இந்த நிலையில் ஆன்லைனில் ஒருவர் மிகக் குறைந்த விலைக்கு சைக்கிள் விற்பனை செய்து வருவது பற்றிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதன் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (2ம் தேதி) ஹாக்னியில் உள்ள ஒரு வீட்டில் மத்திய கிழக்கு பி.சி.யு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 118 சைக்கிள்கள் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இவற்றின் மதிப்பு 30 ஆயிரம் பவுண்ட்க்கும் மேல் இருக்கும்.

சைக்கிள் திருட்டு, திருடிய சைக்கிளை விற்பனை செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 60 வயது முதியவர் மற்றும் 21 வயது இளைஞர் என இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அன்றே அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

தங்களின் திருடப்பட்ட சைக்கிள் ஆன்லைன், சமூக ஊடகம் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது என்று சைக்கிளைப் பறிகொடுத்த பலரும் போலீசில் புகார் செய்து வந்தனர். கிட்டத்தட்ட 11 பேர் இது போன்ற புகாரை அளிக்கவே, போலீசார் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதில் 118 சைக்கிள் கிடைத்துள்ளது.

(Image:news.met.police.uk)

இது குறித்து சார்ஜெண்ட் ஜோ ஸ்டீபன்ஸ் கூறுகையில், “சைக்கிள் திருட்டு பற்றி பலரும் புகார் அளிக்கவில்லை. இதனால் யாருடைய சைக்கிள்கள் திருடுபோன என்று கண்டறிந்து அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்து வருகின்றோம்.

சைக்கிள் வாங்கும் ஒவ்வொருவரும் பாதுகாப்பு குறியீடு மற்றும் பைக் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் சைக்கிள் கண்டுபிடிக்கும்போது அதை உரியவர்களிடம் ஒப்படைக்க வசதியாக இருக்கும். மேலும் குற்றம் இழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் துணை புரியும்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk