ஒரே வாரத்தில் 1.3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!

corona vaccine doses, கொரோனா, தடுப்பூசி
(Image: Dado Ruvic / Reuters)

இங்கிலாந்தில் ஒரே வாரத்தில் 1.3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தடுப்பூசி போடப்படும் பணி தொடங்கியுள்ளது. தடுப்பூசியை போடும் பணியைக் கண்காணிப்பதற்காகவே அமைச்சர் நாதிம் சஹாவி தனியாக நியமிக்கப்பட்டார்.

கடந்த வாரம் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. ஒரு சிலருக்கு சில பின்விளைவுகளை ஏற்படுத்தியதாக தகவல் வெளியானது. அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

தடுப்பூசி போடத் தொடங்கி ஒரு வாரம் ஆன நிலையில் பெரும்பாலும் எந்த பிரச்னையும் இல்லை என்றே கூறப்படுகிறது.

தடுப்பூசி போடப்படும் பணி தொடங்கி ஒரு வாரம் ஆன நிலையில் இதுவரை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 897 பேருக்கு ஃபைசர் – பயோஎன்டெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி போடப்பட்டுள்ளது என் அமைச்சர் நாதிம் சஹாவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 8ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரையிலான காலத்தில் 1.37 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இதை ஒரு நல்ல தொடக்கம் என்று அவர் கூறியுள்ளார்.

தடுப்பூசி போடப்படும் பணியின் முதல் வாரத்தில் 70 மருத்துவமனைகள் ஈடுபடுத்தப்பட்டன. இந்த வாரத்தில் மேலும் 10 மருத்துவமனைகள் தடுப்பூசியை போடும் பணியை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

200 உள்ளூர் தடுப்பூசி போடும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் வாரங்களில் இதன் எண்ணிக்கை 1000மாக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 1.37 லட்சத்தில், 1.08 லட்சம் பேர் இங்கிலாந்தைச் சார்ந்தவர்கள். வேல்ஸில் 7,897 பேருக்கும், வடக்கு அயர்லாந்தில் 4000ம் பேருக்கும், ஸ்காட்லாந்தில் 18 ஆயிரம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் கூறுகையில், “இது வெறும் தொடக்கம் மட்டுமே.

எங்களுடைய தடுப்பூசி போடும் பணியை ஏற்கனவே விரிவாக்கம் செய்துவிட்டோம். இதன் மூலம் மக்கள் நிச்சயம் தங்கள் பழைய இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter