புதிய வகை கொரோனா – இந்தியா உள்ளிட்ட 30 நாடுகள் இங்கிலாந்துடனான போக்குவரத்தைத் துண்டித்தன!

countries ban UK, கொரோனா

இங்கிலாந்தில் புதிய வீரியம் மிக்க கொரோனா வைரஸ் பரவி வருவதைத் தொடர்ந்து இந்தியா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகள் போக்குவரத்தை துண்டிப்பதாக அறிவித்துள்ளன.

இங்கிலாந்தில் புதிய வீரியம் மிக்க கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது மிகப்பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்துமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இருப்பினும் முந்தைய வகையைக் காட்டிலும் 70 சதவிகிதம் விரைவாகப் பரவும் தன்மை கொண்டதாக உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. கிறிஸ்துமஸ் ஐந்து நாள் கொரோனா கட்டுப்பாடு தளர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வீரியம் மிக்க கொரோனா வைரஸ் கண்டு உலக நாடுகள் அச்சம் கொண்டுள்ளன. 30க்கும் மேற்பட்ட நாடுகள் இங்கிலாந்துடனான போக்குவரத்து தொடர்பைத் துண்டித்துள்ளன.

நேற்று நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகியவை போக்குவரத்து துண்டிப்பை அறிவித்தன. இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இது பற்றி முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருந்தன.

இந்த சூழலில் இன்று இந்தியா, ஹாங்காங், பிரான்ஸ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகள் இங்கிலாந்துடனான போக்குவரத்தை துண்டித்துள்ளன.

பிரான்ஸ் தன்னுடைய இங்கிலாந்துடனான எல்லையை 48 மணி நேரத்துக்கு மூடுவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக லாரி, படகு என எந்த வகையிலும் பிரான்சுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை டிசம்பர் 22 முதல் 31ம் தேதி வரை ரத்து செய்துள்ளது. மேலும், டிசம்பர் 22ம் தேதிக்கு முன்பு இங்கிலாந்திலிருந்து வந்தவர்கள் அனைவரும் கொரோனா ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே ஞாயிறு அன்று கொரோனா உறுதியானவர்கள் எண்ணிக்கை 35,928 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தை விட இது இரு மடங்கு அதிகம் ஆகும்.

அதே போல் கடந்த 28 நாளில் கொரேனா பரிசோதனை செய்துகொண்டவர்களில் 326 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 67,401 ஆக அதிகரித்துள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter