பிரபல சூட் தயாரிப்பு நிறுவனமான மோஸ் பிரதர்ஸ் தன் கிளைகளை மூட திட்டம்?

(Image: Google Street)

லண்டன், 30 ஆகஸ்ட் 2020: கொரோனா பாதிப்பு காரணமாக பிரபல சூட் தயாரிப்பு நிறுவனமான மோஸ் பிரதர்ஸ் தன்னுடைய கிளைகள் பலவற்றை மூடுவது என்று முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மிகப்பெரிய அளவில் திருமணங்கள் நடைபெறுவது தடை செய்யப்பட்டுள்ளது. மிகக் குறைந்த அளவிலான விருந்தினர்களுடன் விழா நடைபெற வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடு காரணமாக திருமணங்கள் மிகவும் எளிமையாக நடத்தப்படுகின்றன. இதனால், திருமண நிகழ்ச்சி சார்ந்த துறையினர் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருமண சூட் உள்ளிட்ட ஆயத்த ஆடை தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மோஸ் பிரதர்ஸ் இந்த கொரோனா காலத்தால் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. தற்போதைய நிலையில் இந்த தொழிலில் தாக்குப்பிடிக்க தன்னுடைய பல கிளைகளை மூடுவது என்று அது முடிவு செய்துள்ளதாக முதல் செய்தி வெளியாகி உள்ளது.

கடைகளை மூடவும், அங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுத்து அனுப்பவும் திட்டம் தயாரிக்க சிறப்பு நிபுணர்களை அது நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் எத்தனை பேருக்கு பாதிப்பு வரும் என்று தெரியவில்லை. கடைகள் மூடப்படுவது தொடர்பாக வெளியான செய்திக்கு பதில் அளிக்கவும் அந்த நிறுவனம் மறுத்துள்ளது.

மோஸ் பிரதர்ஸ் நிறுவனத்தை கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு மெனோஷி மைக்கேல் சின்ஹா நிறுவனம் 22 மில்லியனுக்கு வாங்கியதாக அறிவித்தது. அதன் பிறகு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய அது முயற்சி செய்தது. ஆனால் அது வெற்றி பெறவில்லை.

கடந்த ஜூலை மாதம் சிட்டி ஷர்ட்மேக்கர் டிஎம் லிவின் இங்கிலாந்தில் தன்னுடைய 66 ஷாப்களை மூடுவதாக அறிவித்தது. இங்கு பணியாற்றி வந்த 700 பேரில் பெரும்பாலானவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். செலவைக் குறைக்க அது ஆன்லைன் விற்பனை முறைக்கு தன்னை மாற்றிக் கொண்டது. மான்சூன் ஆக்சசரிஸ் தன்னுயைட 35 கிளைகளை மூடியது. இதனால் 545 பேர் வேலை இழந்தனர்.

மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சர் கிளைகள் மூடப்பட்டதால் 7000 பேர் வேலை இழந்தனர். சான்ட்விச் விற்பனையகமான ப்ரேட் எ மென்ஜர் 30 ஷாப்களை மூடியது. இங்கு 3000ம் பேர் வேலை இழந்தனர். டிபென்ஹாம்ஸ் 6500 பேரை வீட்டுக்கு அனுப்பியது, 20க்கும் மேற்பட்ட ஸ்டோர்களை அது மூடியது.

தொடர்ந்து சூப்பர் மார்க்கெட், ஹோம்ஷாப்பிங், உணவு ரெஸ்டாரண்ட்கள், ஆடை நிறுவனங்கள் தங்கள் கிளைகளை மூடுவதாக அறிவித்த வண்ணம் உள்ளது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk