லண்டன்: எட்டு மாத குழந்தையை கழுத்தறுத்து கொன்ற கொடூர தாய்!

Met Police

லண்டன் வெம்ப்லேயில் எட்டு மாத குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் தாயை போலீசார் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட மேற்கு லண்டனில் உள்ள மெம்ப்லேயில் (wembley) நேற்று காலை 9.50 மணி அளவில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் குழந்தைக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக வரும்படியும் கூறியுள்ளனர். அவர்கள் கொடுத்த முகவரிக்கு வந்து பார்த்தபோது எட்டு மாத குழந்தை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. இது குறித்து மெட்ரோபாலிடன் போலீசார் கூறுகையில், “இந்த சம்பவம் தொடர்பாக யாரையும் போலீசார் தேடவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இது மிகவும் மோசமான சம்பவம். அனைவரையும் பாதிக்கக் கூடிய சம்பவமும் கூட. நாங்கள் எங்கள் கடமையை செய்து கொண்டிருக்கிறோம். ஆரம்பக் கட்ட விசாரணை நடந்து வருகிறது. இந்த நேரத்தில் இந்த சம்பவத்தோடு வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா எதையும் உறுதியாக கூற முடியாது” என்றனர்.

சம்பவம் நடந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “கையில் விலங்கிடப்பட்ட கறுப்பு நிற ஆடை அணிந்த பெண் ஒருவரை போலீசார் அழைத்துச் சென்று காரில் ஏற்றினர். குழந்தையின் தந்தை மனநல பாதிப்பு காரணமாக கத்திக்கொண்டே இருந்தார். அவருடைய செயல்பாடுகள் வெறிபிடித்தவர் போலத் தெரிந்தது. அவரையும் காரில் ஏற்றினார்கள்” எனத் தெரிவித்தனர்.

மற்றொருவர் கூறுகையில் இந்த வழக்கை விசாரிக்கும் இலோனா சிடோரோவுக்கு நான் காஃபி தயாரித்துக் கொடுத்தேன். அப்போது அவர் அந்த குழந்தையின் தாய்தான் குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்தார். இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை என்று கூறினார். மேலும் குழந்தையை கொன்றதும் கணவனுக்கு போன் செய்து உன்னுடைய குழந்தையை கொன்றுவிட்டேன் என்று அந்த பெண் தெரிவித்ததாகவும் கூறினார் என்றார்.

சம்பவம் நடந்தபோது அந்த வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து போலீசுக்கு தகவல் கொடுத்ததாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வேறு சிலர் கூறுகையில், “கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட தம்பதியினர் அருகில் உள்ளவர்களுடன் மிகவும் நட்புடன் இருந்தனர். அங்கு ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பமாக, 7-8 பேர் வரை வசித்து வந்தனர். அவர்களுடன் நட்பாக பேசுவேன். சில நேரங்களில் அவர்கள் வீட்டுக் குழந்தைகள் எங்கள் வீட்டுக்கு வந்து பிளாக்பெர்ரி பறிக்கவும் அனுமதித்துள்ளேன். ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடைபெறும் என்று எதிர்பார்க்கவே இல்லை” என்றார்.

தற்போது அந்த வீட்டின் முன்பு ஒரு போலீஸ் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk