கொரோனா தொற்றுடன் ரயிலில் பயணித்த பெண் எம்.பி! – ராஜினாமா செய்ய வலியுறுத்தல்

Margaret Ferrier
மார்கரெட் ஃபெரியர் (Image: Twitter)

லண்டன், அக்டோபர் 2, 2020: கொரோனா தொற்றுடன் பெண் எம்.பி  ரயிலில் பயணித்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவர் பதவி விலக பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இங்கிலாந்தின் ரூதர்கெலன் மற்றும் ஹாமில்டன் வெஸ்ட்க்கான எம்.பி-யாக இருப்பவர் மார்கரெட் ஃபெரியர். இவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் கிளாஸ்கோவில் இருந்து லண்டனுக்கு ரயில் வந்துள்ளார். கொரோனா பரிசோதனையில் அவருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா தொற்றுடன் அவர் ரயிலில் பயணம் மேற்கொண்ட தகவல் பலருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

மக்களவை சபாநாயாகர் சர் லிண்ட்சே ஹோலி தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். மார்கரெட் மீது தான் மிகவும் கோபத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், “மார்கரெட் மற்றவர்களின் ஆபத்தை ஆபத்தில் ஆழ்த்தியதை தன்னால் நம்ப முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மார்க்கரெட் ஃபெரியருக்கு கடந்த சனிக்கிழமையே கொரோனா அறிகுறி இருந்துள்ளது. அன்றே அவர் பரிசோதனையும் செய்துள்ளார்.

அதன் பிறகு உடல் நிலை ஆரோக்கியமாக இருப்பதாக அவர் கருதியதால் கொரோனா பற்றி கவலையின்றி  கிளாஸ்கோவில் இருந்து லண்டனுக்கு ரயிலில் வந்துள்ளார்.

திங்கட்கிழமை மக்களவையில் நடந்த கொரோனா தொடர்பான விவாதத்தில் பங்கேற்றுப் பேசியுள்ளார்.

அன்று மாலைதான் அவரது கொரோனா பரிசோதனை முடிவு வந்துள்ளது. அதில் பாசிடிவ் என்று தெரியவந்துள்ளது. அதன் பிறகும் அவர் ரயில் மூலம் கிளாஸ்கோவுக்கு திரும்பியுள்ளார்.

புதன் கிழமைதான் அவருக்கு கொரோனா தொற்று உறுதியான தகவலை ஸ்காடிஷ் தேசிய கட்சியின் கொரடா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக கண்டனங்கள் குவியத் தொடங்கியது.

ஸ்காட்லாந்தின் முதல்வர் நிக்கோலா ஸ்டர்ஜன் இது குறித்துக் கூறுகையில், “மார்கரெட் ஃபெரியர் கற்பனைக்கு எட்டாத மோசமான விதிமுறை மீறல் என்ற குற்றத்தை புரிந்துள்ளார்.

இது அவரது பொறுப்பற்ற, ஆபத்தான மற்றும் விவரிக்க முடியாத நடவடிக்கையாக அமைந்துள்ளது” என்றார்.

அவர் வெளியிட்ட ட்வீட் பதிவில், “மார்கரெட் ஃபெரியரிடம் பேசும் போது, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று என்னுடைய எண்ணத்தைத் தெளிவாக தெரிவித்தேன். இதை மிகவும் கடினமான உள்ளத்தோடு தெரிவித்தேன்.

அவர் என்னுடைய தோழி, உடன் பணியாற்றியவர்கள் என்றாலும் அவரது செயல்பாடு ஆபத்தானது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை, இருப்பினும் அவர் சரியானதை செய்வார் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

மார்க்கரெட் ஃபெரியரின் இந்த பொறுப்பற்ற செயலுக்காக அவர் ஸ்காடிஷ் தேசிய கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தன்னுடைய செயலுக்காக மார்கரெட் ஃபெரியர் வருத்தம் தெரிவித்ததுடன், மன்னிப்பும் கேட்டுள்ளார். இருப்பினும் அவருக்கு எதிராக பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter