ஹெட்போன் போட்டு சாலையைக் கடக்காதீர்கள்! – விபத்தில் சிக்கிய மகனின் படத்தை வெளியிட்டு தாய் உருக்கம்!

சுய நினைவு திரும்பிய நிலையில் ஹாரிசன் எல்லிஸ் (Image: IOW County Press/Solent News)

ஹெட்போன் போட்டு சாலையை கடக்க முயன்றபோது கார் மோதியதால் சுய நினைவிழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மகனின் படத்தை வெளியிட்டு, யாரும் ஹெட்போன் போட்டு சாலையில் நடக்காதீர்கள் என்று தாய் ஒருவர் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் வைட் தீவில் ஹாரிசன் எல்லிஸ் என்ற 16 வயது பள்ளி செல்லும் இளைஞர் காதில் ஹெட்போன் அணிந்தபடி நண்பர்களைக் காண சென்று கொண்டிருந்தார். இசையில் மூழ்கிய அவர் துளி கூட சாலை விழிப்புணர்வு இன்றி திடீரென்று சாலையில் இறங்கியுள்ளார். இதனால் கார் ஒன்று எதிர்பாராத விதமாக ஹாரிசன் எல்லிஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் முழங்கை, மணிக்கட்டு, தோள்பட்டை, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். சுய நினைவிழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற ஹாரிசன் உடல் நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஹாரிசனின் தாய் கூறுகையில், “தற்போது அவன் உயிரோடு இருப்பதே மிகப்பெரிய அதிர்ஷ்டம்தான். மக்கள் சாலையில் நடக்கும்போது ஹெட்போன் அணிந்து பாட்டு கேட்பதை தவிர்த்துவிட்டு, தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கவனிக்க வேண்டும்.

ரத்தத்தால் நனைந்த ஹெட்போன் (Image: IOW County Press/Solent News)

நடக்கும்போதும், வாகனம் ஓட்டும் போதும் மொபைல் போன், ஹெட்போன் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். மக்கள் அனைவரும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும், இது பற்றி சிந்திக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இன்று ஆண்டின் மிகவும் வெப்பமான நாள், இன்றும் அவன் தலையில் கட்டுடன் படுத்துக் கிடக்கிறான்.

மொபைலை நோண்டிக்கொண்டு எந்த இடத்தில் சாலையை கடக்க வேண்டும் அந்த இடத்தில் கடக்காமல் ஏதோ நியாபகத்தில் சாலையில் இறங்கி கார்களுக்கு இடையே சிக்கிக்கொண்டான். இதன் மூலம் அவனுடைய வாழ்க்கை ஒரு நிமிடத்தில் முற்றிலுமாக மாறிவிட்டது. சரியான வேகத்தில் காரை இயக்கிய டிரைவரால் புனித மேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

எந்த ஒரு குடும்பமும் இது போன்ற கஷ்டத்தை அனுபவிக்கக் கூடாது. இருந்த போதிலும் அவன் உயிரோடு இருப்பது எங்கள் அதிர்ஷ்டமே. விபத்தின் சிசிடிவி காட்சிகள் நம்முடைய வாழ்வு எவ்வளவு வேகத்தில் மாறுகிறது என்பதை காட்டும் வகையில் உள்ளது” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk