தயாராகும் அரசு… கொரோனா தடுப்பூசி வழங்குதல் அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமனம்!

vaccine rollout minister, கொரோனா, தடுப்பூசி
(Image: gov.uk)

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி வழங்குவதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார்.

பல முன்னணி நிறுவனங்களும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகமும் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளன.

கொரோனா தடுப்பூசி இன்னும் சில வாரங்களில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுவிடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

கொரோனா தடுப்பூசிக்கு உரிய அனுமதி கிடைத்ததும் டிசம்பர் மாதம் மத்தியில் கொரோனா ஊசி மக்களுக்கு போடப்படும் என்று கூறப்படுகிறது. முதலில் தொற்று பாதிப்பு வாய்ப்பு அதிகம் உள்ளவர்களுக்கே தடுப்பூசி போடப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மேற்பார்வை செய்ய தொழில் துறை இணை அமைச்சராக இருக்கும் நாதிம் ஜஹாவி தற்காலிக ஏற்பாடாக கூடுதலாக சுகாதாரத் துறை இணை அமைச்சர் பதவியையும் ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் துறை பணிகள் அவருக்கு இருந்தாலும் பிரதானமாக கொரோனா தடுப்பூசி வழங்குதலை மேற்பார்வையிடும் பணி அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நாதிம் ஜஹாவி இங்கிலாந்தில் விநியோகிக்கப்படும் கொரோனா தடுப்பூசி பணிகளை மட்டுமே மேற்பார்வை செய்வார். ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து பகுதிகள் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணியை தங்கள் நாடுகளில் தாங்களே மேற்கொள்ளும். தேவையான உதவி ஒத்துழைப்பை மட்டும் ஜஹாவி வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைப் படிச்சீங்களா: புதிய மூன்றடுக்கு கட்டுப்பாடு வராவிட்டால் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும்! – அமைச்சர் எச்சரிக்கை

பிரிட்டன் அரசு 10 கோடி டோஸ்களை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்திடம் ஆர்டர் செய்துள்ளது. ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனத்திடமிருந்து 4 கோடி தடுப்பூசி டோஸ்களை வாங்குகிறது. இது தவிர அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்திடமிருந்து 50 லட்சம் டோஸ்களை வாங்குகிறது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழக தடுப்பூசி விநியோகத்தில் பிரச்னை இல்லை. ஃபைசர் நிறுவனம் தயாரிப்புகளை மைனஸ் 70 டிகிரி வெப்பநிலையில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.

இவ்வளவு பாதுகாப்பு வசதி தேவைப்படும் தடுப்பூசியை நாடு முழுக்க கொண்டு சென்று விநியோகிப்பது மிகவும் சவாலான பணியாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தடுப்பூசி விநியோகிக்கும் பணிக்கு கூடுதலாக இணை அமைச்சர் நியமிக்கப்பட்டு இருப்பதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் மெட் ஹென்காக் வரவேற்பு தெரிவித்துள்ளார். “மகத்தான பணி நம் முன்னால் இருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

ஸ்ட்ராட்ஃபோர்டு ஆன் அவானின் எம்.பி-யாக ஜஹாவி உள்ளார். கொரோனா தடுப்பூசி பணியை வருகிற கோடைக் காலம் வரை இவர் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter