நோர்ஃபோக் கோழி இறைச்சி நிறுவன கொரோனாத் தொற்று 100ஐ நெருங்கியது!

Banham Poultry
பான்ஹாம் கோழி இறைச்சி நிறுவனம். (Image: PA/BBC.COM)

நோர்ஃபோக், 31 ஆகஸ்ட் 2020: கோழி இறைச்சி நிறுவனத்தில் ஏற்கனவே 75 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட 100 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

நோர்ஃபோக்கில் உள்ள பிரபல கோழி இறைச்சி நிறுவனமான பான்ஹாமில் கடந்த வியாழக்கிழமை 75 பேருக்கு கொரோனா உறுதியானது. இரண்டே நாளில் அந்த எண்ணிக்கை 100ஐ நெருங்கியுள்ளது.

தற்போது அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த 96 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இன்னும் பலரது பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை கோழி இறைச்சி கட்டிங் வளாகத்தில் பணியாற்றிய 350 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அந்த பகுதியைத் தற்காலிகமாக மூடுவதாக நிறுவனம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து தற்போது அங்கு கொரோனா நிலவரம் பற்றிய தகவலை நோர்ஃபோக் கவுன்சில் பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் லூயிஸ் ஸ்மித் வெளியிட்டுள்ளார்.

தினசரி பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய அவர், “கொரோனாத் தொற்றைத் தொடர்ந்து அந்த ஆலை மிகத் தீவிரமாக சுத்தப்படுத்தப்பட்டது.

அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த பல தொழிலாளர்கள் ஜேம்ஸ் பேகெட் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

கட்டிங் அறையில் இருந்த பணியாளர்களுக்கு தொற்று இருந்ததாக கூறப்பட்டது. தற்போது அங்கு பணியாற்றும் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம்.

பரிசோதனை செய்துகொள்ளாதவர்கள் யாரும் இருந்தால் பரிசோதனைக்கு முன்வர வேண்டும். இதற்காக மொபைல் யூனிட்கள் வரவழைக்கப்படுகின்றன” என்றார்.

பான்ஹாம் கோழி இறைச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிளேய்ன் வான் ரென்ஸ்பர்க் இது குறித்து கூறுகையில், “எங்கள் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்.

எங்களால் முடிந்த அனைத்தையும் சரியான முறையில் பின்பற்றினோம். பொது சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளோம்” என்றார்.

குளிர்பதன வசதி கொண்ட நிறுவனங்கள், ஆலைகளில் கொரோனாத் தொற்று பரவல் அதிகமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

ஸ்காட்லாந்தில் இப்படி ஒரு கோழி இறைச்சி நிறுவனத்தில் 150க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டது.

பெர்த்ஷையரில் ஒரு உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் 134 ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 18 பேருக்கு என மொத்தம் 152 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

தொடர்ந்து பல நிறுவனங்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருவது அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

நோர்ஃபோக் தொற்று தொடர்பாக தற்போதுதான் கண்காணிப்பு தொடங்கியுள்ளன, 96 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மூலமாக அவர்கள் குடும்பத்தில் எத்தனை பேருக்கு தொற்று பரவியது என்ற விவரம் இல்லை.

இன்னும் பலருக்கும் முடிவு வர வேண்டி உள்ளதால் நோர்ஃபோக் மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கும் என்றே நம்பப்படுகிறது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter