கொரோனா புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார் போரிஸ் ஜான்சன்! – 6 மாதங்கள் வரை நீடிக்கும்

boris johnson
பிரதமர் போரிஸ் ஜான்சன். (கோப்புப் படம்)

லண்டன், 22 செப்டம்பர் 2020: கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று அறிவித்துள்ளார்.

இந்த கடும் விதிகள் ஆறு மாதங்கள் நீடிக்கும் என்று அவர் அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா 2ம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இங்கிலாந்தில் தினம் ஒரு நகரத்தில் கொரோனா பரவலைத் தடுக்க புது புது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து முழுமைக்குமான ஊரடங்கு விதிமுறைகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இதன் படி, கடை ஊழியர்கள் உள்பட அனைவரும் முக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். திருமணங்களில் அதிகபட்சமாக 15 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

வீட்டில் இருந்து வேலை செய்யக் கூடிய அலுவலர்கள் வீட்டில் இருந்தே செய்ய வேண்டும்.

இங்கிலாந்தில் பப், பார், ரெஸ்டாரண்ட் அனைத்தும் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்.

வியாழக்கிழமை முதல் டேபிள் சர்வீஸ் மட்டுமே அனுமதிக்கப்படும். டேக் அவே தொடரும்.

டாக்ஸி, தனியார் வாகனங்களில் கட்டாய முகக் கவசம் அணிய வேண்டும்.

அக்டோபர் 1ம் தேதி முதல் விளையாட்டு அரங்குகளுக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் திட்டம் தற்காலிக ரத்து செய்யப்படுகிறது.

முகமூடி அணியாமல் இருப்பவர்கள், ஆறுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாகக் கூடுபவர்களுக்கு முதல் முறையாக 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும்.

தொடர்ந்து விதியை மீறுபவர்களுக்கு தண்டனை இரட்டிப்பாக்கப்படும்.

புதிய விதிமுறைகள் பற்றி பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் பேசும் போது, “கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் கட்டம் ஏற்படும் என்பதைப் பற்றி அரசு நன்கு அறிந்து வைத்திருந்தது.

இரண்டாம் கட்ட பரவல் என்பது உண்மை. பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளைப் போல நாமும் முக்கிய பாதிப்பை எட்டிவிட்டோம்.

தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை நடைமுறைப்படுத்த காவல்துறை, உள்ளாட்சி நிர்வாகத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படும்.

அவர்கள் விரும்பினால் ராணுவத்தின் உதவியைப் பெறவும் அனுமதிக்கப்படும்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter