இயல்புநிலைக்குத் திரும்ப ஓராண்டும்! – கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவன விஞ்ஞானி தகவல்

normal life resume, தடுப்பூசி, கொரோனா
(Image: PA:Press Association)

கொரோனா தடுப்பூசி இப்போது பயன்பாட்டுக்கு வந்தாலும் மக்கள் இயல்புநிலைக்குத் திரும்ப ஓராண்டாகும் என்று கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் துணை நிறுவனர் உகூர் சாஹின் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி தயாராகிவிட்டது, இறுதி அனுமதிக்காக காத்திருக்கிறது என் கடந்த வாரம் பயோஎன்டெக் மற்றும் ஃபைசர் மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த தடுப்பூசி டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசியைத் தயாரித்துள்ள பயோஎன்டெக் நிறுவனத்தின் இணை நிறுவனர் பேராசிரியர் உகூர் சாஹின் கொரோனா பிபிசி செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அதில் “கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகு ஒருவரிடமிருந்து மற்றவருக்கு கொரோனா நோய்த் தொற்று பரவும் வேகம் மிகப் பெரிய அளவில் குறையும் என்று நம்புகிறேன்.

புதிய தடுப்பூசி 90 சதவிகிதம் அளவுக்கு பலன் அளிக்கும் என்று தெரியவந்துள்ளது. அது 90 சதவிகிதம் பலன் அளிக்காமல் வெறும் 50 சதவிகிதம் பலன் அளித்தாலும் கூட அதனால் கொரோனா பரவல் மிகப் பெரிய அளவில் வீழச்சியை சந்திக்கும்.

தற்போது ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் தொடர்ந்தால் இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக 300 மில்லியன் டோஸ்கள் உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும்.

கோடைக் காலத்தில் வெப்பம் காரணமாக கொரோனா பரவல் குறையும். எனவே, அடுத்த ஆண்டு குளிர் காலம் வரை தடுப்பூசி வழங்க வேண்டியிருக்கும். இதன் மூலம் அடுத்த குளிர்காலம் தற்போது உள்ளது போன்று இருண்ட காலமாக இருக்காது” என்றார்.

கொரோனா தடுப்பூசி டிசம்பரில் வந்துவிடும், அதன் பிறகு மிகப்பெரிய அளவில் மாற்றம் நிகழும் என்று மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனரே இப்படி கூறியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter