லண்டனில் ஊரடங்குக்கு எதிராக போராட்டம்… நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது!

Officers arrest regulations, போராட்டம், கொரோனா, ஊரடங்கு
(Image: PA MEDIA)

லண்டனில் முழு ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இங்கிலாந்தில் கொரோனா 2ம் அலை பரவல் வேகம் எடுத்ததைத் தொடர்ந்து முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. டிசம்பர் 2ம் தேதி வரை நான்கு வாரங்களுக்கு இந்த ஊரடங்கு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அமைச்சர்கள் கூறினர். ஆனால், அதற்கு வாய்ப்பிருக்காது என்று நம்புவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் முழு ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஏராளமானோர் திடீர் போராட்டம் நடத்தினர். நேற்று இரவு 7 மணி அளவில் நூற்றுக் கணக்கானோர் மத்திய லண்டன் டிராஃபல்கர் சதுக்கத்திற்கு அருகே ஒன்று கூடினர்.

ஆக்ஸ்ஃபோர்டு தெரு மற்றும் ஸ்டராண்ட் உள்ளிட்ட இடங்களிலும் கொரோனா ஊரடங்குக்கு எதிராக போராட்டம் நடத்த பலரும் குழுமியிருந்தனர்.

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இப்படி ஏராளமானோர் ஒரே இடத்தில் ஒன்று கூடுவது சட்ட விரோதமானது. எனவே, அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாம் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இரவு எட்டு மணிக்கு மேலும் சுதந்திரம் வேண்டும், ஊரடங்கு வேண்டாம் என்று கோஷங்களை அவர்கள் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.

இதனால் லண்டன் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 190 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களில் 189 பேருக்கு ஊரடங்கை மீறியதற்கான அபராதத்துக்கான நோட்டீஸ் வழங்கப்பட்டது. கூட்டத்தை ஏற்பாடு செய்த நபருக்கு 10 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து மெட்ரோபாலிடன் ஏடிசி மாட் ட்விஸ்ட் கூறுகையில்,”உயிர்களைக் காப்பாற்றவும் மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும் வடிவமைக்கப்பட்ட விதிமுறைகளை மீறுவதற்கு எந்த ஒரு நியாயமான காரணமும் இருக்க முடியாது.

நேற்றிரவு ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்ததாக கூறுபவர்கள் லண்டன் மக்களின் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாக இருந்தனர். இந்த ஆபத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

போலீஸ் அதிகாரிகள் விதிமுறைகளை விலக்கி கலைந்து செல்லும்படி வலியுறுத்தினர். ஆனால், துரதிஷ்டவசமாக அவர்கள் மீறுவதில் உறுதியாக இருந்தனர்.

அதனால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

முந்தைய கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றாததால்தான் 2வது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஒருவர் கூறியுள்ள நிலையில், இந்த போராட்டம் எல்லாம் தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter