பிரிஸ்டலில் சட்டவிரோத இசை நிகழ்ச்சி: தடுத்து நிறுத்திய போலீஸ் மீது தாக்குதல்!

Bristol illegal rave, போலீசார்
(Image: Twitter)

பிரிஸ்டலில் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறி இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதை தடுத்த போலீசார் மீது செங்கல் மற்றும் பாட்டில்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் வருகிற வியாழக்கிழமை முதல் முழு ஊரடங்கு அமலாகும் என்று பிரதமர் அறிவித்த வேளையில், பிரிஸ்டனில் ஏராளமான இளைஞர்கள் இசைக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

பிரிஸ்டலுக்கு அருகில் உள்ள ஒரு கிடங்கில் சட்ட விரோத இசை நிகழ்ச்சி நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சனிக்கிழமை இரவு 10.30 மணி அளவில் போலீசார் அங்கு வந்தனர்.

உள்ளே 700க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டிருந்து இசை நிகழ்ச்சி, மது என கொண்டாட்டத்தில் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், மாஸ்க் அணியாமல் இருந்த அவர்களை அமைதியாக கலைந்து செல்லும்படி கேட்டுக் கொண்டனர்.

ஆனால், கூட்டத்திலிருந்த சிலர் போலீசார் மீது கற்கள் மற்றும் மது பாட்டில்கள் மற்றும் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பல போலீசார் காயம் அடைந்ததாக அவான் மற்றும் சோமர்செட் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தி, மக்களை வெளியேற்றினர். போலீசார் தாக்குதல் நடத்தியது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு ஏராளமானோர் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தனர். அவர்கள் அங்கு செல்வதை தடுக்க போலீசார் பாதையை அடைத்தனர். இதுவும் போலீசாருக்கு எதிராக மக்களைத் திருப்பியது.

பலரும் நடந்தே நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு செல்ல முயன்றனர். அவர்களை எல்லாம் தடுத்து தங்கள் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பினர்.

நிகழ்ச்சி நடந்த இடத்தின் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. கூட்டத்தை எதிர்கொள்ள கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டனர்.

அந்த இடத்தில் இருந்து இளைஞர் கூட்டத்தை முற்றிலுமாக அப்புறப்படுத்த ஞாயிறு அதிகாலை 4 மணி வரை போலீசார் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு 2ம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்கப்படலாம் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.

நாடே ஊரடங்கை நினைத்துக் கலங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இசை நிகழ்ச்சி தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சட்டத்தை மீறி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு மிகக் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter