லண்டன் 4ம் நிலை கட்டுப்பாடு எப்போது முடியும்? – ஹென்காக் அளித்த அதிர்ச்சி பதில்

கொரோனா, கட்டுப்பாடு
(Image: BBC)

கொரோனா பரவல் காரணமாக லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடு சில மாதங்களுக்கு நீடிக்கும் என்று மெட் ஹென்காக் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. புதிய அதிக வீரியம் கொண்ட வைரஸ் கிருமி பரவி வருவது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன், கிழக்கு மற்றும் தென் கிழக்கு இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதால் கட்டுப்பாடு தளர்வு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது தளர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

அரசின் புதிய அறிவிப்பு காரணமாக மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டியிருக்கும் அல்லது கைவிட வேண்டியிருக்கும்.

தொழிலாளர் கட்சியின் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் போரிஸ் ஜான்சன் அரசு முன்னர் செய்யத் தவறிய, மிக அலட்சியமாக செயல்பட்ட காரணத்தால்தான் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த சூழலில் ஏன் இந்த புதிய கட்டுப்பாடு என்பது குறித்து சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் பிபிசி-க்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “கிறிஸ்துமஸை ரத்து செய்ய வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கம் இல்லை. ஆனால் நமக்குக் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் நடவடிக்கை தவிர்க்க முடியாததாகிவிட்டது.

பொது மக்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது போல கருதி முன்னெச்சரிக்கையாக செயல்படுவது முக்கியம்.

ஏனெனில் தற்போது புதிதாக பரவி வரும் வீரியம் மிக்க கொரோனா வைரஸ் பரவலை நாம் கட்டுக்குள் கொண்டுவந்தாக வேண்டியுள்ளது.

இந்த புதிய நான்காம் நிலை கட்டுப்பாடு நடவடிக்கைகள் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை. அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கும் வரையில் சில மாதங்களுக்கு இது நீடிக்கலாம்” என்றார்.

லண்டன் மேயர் சித்திக்கான் கூறுகையில், “வெறும் 11 மணி நேரத்தில் நான்காம் நிலை கட்டுப்பாட்டுக்குள் சென்றிருப்பது பொது மக்களுக்கும் வணிகர்களுக்கும் மிகப்பெரிய அடியாக அமைந்துள்ளது.

அரசின் அறிவிப்பு மக்கள் மத்தியில் வேதனை, விரக்தி, சோகம் மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் நல்ல ஒரு காரியத்துக்காக இது கொண்டுவரப்பட்டுள்ளது என்பதால் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter