ஆக்ஸ்ஃபோர்டு: ஒரே வாரத்தில் மூன்று மடங்கு அதிகரித்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை!

Oxford University
(Image: Google Street)

ஆக்ஸ்ஃபோர்ட், அக்டோபர் 19, 2020: ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை ஒரே வாரத்தில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

ஆக்ஸ்ஃபோர் பல்கலைக் கழகத்தில் கடந்த வாரத்தில் கொரோனாத் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கையை இன்று பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. இதில் 197 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் 61 பேருக்கு தொற்று உறுதியானதாக பல்கலைக் கழகம் அறிவித்திருந்தது. ஒரே வாரத்தில் மூன்று மடங்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த வெள்ளிக்கிழமை வரையிலான ஒரு வாரத்தில் 802 பணியாளர்கள் மற்றும் மாணவர்களிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 197 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வருவது பற்றி ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் வீட்டில் தங்கியிருக்கும் மாணவர்கள், தொடர்ந்து வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பல்கலைக் கழகத்தில் தொற்று ஏற்பட்ட ஊழியர்கள் மற்றும் மாணவர்களுடன் பல்கலைக் கழகம் தொடர்பில் உள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் பல்கலைக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய மாணவ சமுகத்திற்கு ஏற்படும் அபாயங்களைக் குறைக்க மாணவர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என்று பல்கலைக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்ட சோதனைகள் அடிப்படையில் மட்டுமே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக் கழகத்துக்கு வெளியே பரிசோதனை செய்து உறுதியானவர்கள் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்ஃபோர்டு நகரிலும் கொரோனாத் தொற்று தீவிரமாக உள்ளது. திங்கட்கிழமை வெளியான அறிக்கை படி அங்கு 1752 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter