லண்டன்: குண்டு காயத்தால் செயலிழந்த தமிழ் மாணவியை கட்டாயப்படுத்தும் பள்ளி நிர்வாகம்!

(Image: Rex Features)

லண்டன். அக்டோபர் 19, 2020: சிறு வயதில் நுரையீரல், முதுகுத் தண்டு வடத்தில் குண்டு காயம் அடைந்து, தற்போது கொரோனாத் தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ள தமிழ் பெண் துஷா கமலேஷ்வரனை பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துஷா கமலேஷ்வரன் (15) எசெக்ஸ் இல்ஃபோர்ட் பகுதியில் செயல்படும் செவன் கிங்ஸ் பள்ளியில் பயின்று வருகிறார்.

அவருக்கு ஐந்து வயதாக இருக்கும் போது உறவினர் நடத்தி வந்த கடைக்கு சென்ற போது, நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்றில் துஷாவின் நெஞ்சில் குண்டு பாய்ந்தது.

இதில் அவரது நுரையீரல் மற்றும் முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்டது. இதனால் தற்போதும் அவர் சக்கர நாற்காலியிலேயே வலம் வரும் நிலை உள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்று எளிதில் தாக்கும் நிலையில் துஷா உள்ளதால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து படிப்பைத் தொடர்ந்து வருகிறார்.

ஆனால், அவர் படித்து வரும் செவன் கிங்ஸ் பள்ளி நிர்வாகம் அவரை கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறது.

இது தொடர்பாக மருத்துவர் அளித்த கடிதத்தை பள்ளி நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டது. மருத்துவர் சுரேஷ் பள்ளி நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு அளித்த விளக்கத்தையும் ஏற்க அந்த பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டது.

துஷாவை பள்ளிக்கு அனுப்பாவிட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் மிரட்டியதாக அவரது பெற்றோர் சசி மற்றும் ஷாமிளா தெரிவித்துள்ளனர்.

(Image: Rex Features)

தி சன்டே இதழுக்கு பேட்டி அளித்துள்ள துஷாவின் சகோதரர் துஷான், “திங்கட்கிழமை திஷா பள்ளிக்கு சென்றார்.

ஆனால் அவர் பாதுகாப்பின்மையையும் பதற்றத்தையும் உணர்ந்துள்ளார். பள்ளியின் செயல்பாடு நியாயமற்றது” என்றார்.

தற்போதுள்ள சட்டத்தின் படி, சரியான காரணம் இன்றி பள்ளிக்கு வராத குழந்தையின் பெற்றோருக்கு 60 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும்.

இதை 21 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் அபராதம் 120 பவுண்டாக உயரும். அதன் பிறகும் பள்ளிக்கு வரவில்லை, அபராதம் செலுத்தவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

நுரையீரல் வழியே குண்டு பாய்ந்து முதுகு தண்டை சிதைத்தது பற்றி விரிவான தகவல் மருத்துவ அறிக்கையைக் கொடுத்தும் பள்ளி நிர்வாகம் ஏற்க மறுப்பது அதிர்ச்சியை அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter