பூனைக்கும் கொரோனா உறுதி… இங்கிலாந்து அரசு வெளியிட்ட எச்சரிக்கை!

வேபிரிட்ஜில் பூனைக்கும் கொரோனா தொற்று பரவியது உறுதியாகி உள்ளது. (Image: Laura Nightingale)

இங்கிலாந்தில் முதன்முறையாக வீட்டில் வளர்த்து வந்த பூனை ஒன்றுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் மக்களின் வாழ்க்கையை கொரோனா புரட்டிப்போட்டுள்ளது. காற்றில் பரவுமா இல்லையா என்பதே மிகப் பெரிய சர்ச்சையாக இருந்த நிலையில் கொரோனா விலங்குகளுக்கும் பரவும் என்பது தற்போது உறுதியாகி உள்ளது. இங்கிலாந்தின் மனிதர்களிடமிருந்து பூனைக்கு கொரோனா வைரஸ் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேபிரிட்ஜில் உள்ள விலங்குகள் மற்றும் தாவர ஆரோக்கிய ஆய்வுக்கூடம் இதை உறதி செய்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் செல்லப் பிராணிகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா பரவுகிறது என்று அர்த்தம் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பூனையின் உரிமையாளர்களுக்கு கொரோனாத் தொற்று முன்பு இருந்தது. அவர்கள் மூலமாக பூனைக்குப் பரவியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இங்கிலாந்தின் தலைமை கால்நடை அதிகாரி கிறிஸ்டின் மிடில்மிஸ் கூறுகையில், “இது மிகவும் அரிதான நிகழ்வு. நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட விலங்குக்கு மைல்ட் அளவிலேயே கொரோனா தொற்று உள்ளது. ஒரு சில நாட்களில் அந்த பூனை நலமடையும். விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா தொற்று பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நிலமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பூனையின் உரிமையாளர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.

பூனையின் உடல்நிலை பாதிக்கப்படவே அதை விலங்குகள் பராமரிப்பு மருத்துவரிடம் அதன் உரிமையாளர்கள் அழைத்துச் சென்றனர். முதலில் பூனைக்கு வேறு வைரஸ் தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. அதற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சார்ஸ் கோவி-2 (கோவிட் 19) தொற்று இருப்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆய்வாளர்கள் மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்தனர். மீண்டும் கொரோனாத் தொற்று உறுதியானது.

இது குறித்து பிரதமர் அலுவலக செய்தியாளர் கூறுகையில், “செல்லப் பிராணிகள் மூலமாக மனிதர்களுக்கு கொரோனாத் தொற்று பரவும் என்பதற்கான ஆதாரம் இல்லை. நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் உரிமையாளரிடமிருந்து பூனைக்கு தொற்று பரவியுள்ளது உறுதியாகிறது. செல்லப்பிராணிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டால் அதை வெளியே விடாமல் வீட்டுக்குள்ளேயே வைத்து பராமரிக்க வேண்டும். கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk