சிறிய ரக விமானம் விபத்து: அதிர்ஷ்டவசமாக விமான உயிர் தப்பினார்

வயல் வெளியில் விழுந்து விபத்துக்குள்ளான சிறிய ரக விமானத்தில் இருந்து 70 வயது மதிக்கத்தக்க முதியவர் பத்திரமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒக்போர்ன் செயிட் ஜார்ஜ் விமான தளத்தில் இருந்து ஞாயிற்றுக் கிழமை (ஜூலை 12ம் தேதி) பிற்பகல் 1.54 மணி அளவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு விமானம் ஒன்று வயல் பகுதியில் விழுந்து கிடப்பதாகவும், 70 வயதான முதியவர் ஒருவர் ஆபத்தான நிலையில் விமானத்தில் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

சிறிய ரக விமானத்தை ஓட்டிவந்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அந்த முதியவரை பத்திரமாக மீட்டனர். அவருக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்தது. ஆம்புலன்ஸ் உதவியுடன் அவர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். தீயணைப்பு வீரர்கள் விமானத்தில் இருந்து வெளியேறிய எண்ணெய் கசிவை நிறுத்தி, விமானம் மற்றும் வயல்வெளி தீப்பிடிக்காமல் இருக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். ஏ 346 லோயர் உபாம் ஏரோடிராமுக்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

விமான விபத்துக்கள் பற்றி விசாரணை நடத்தி வரும் அதிகாரி கூறுகையில், “தெற்கு ஸ்வின்டனில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது என்று தகவல் கிடைத்தது. இந்த விமானம் இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி பயன்படுத்தி ஃபோக் உல்ஃப் எஃப் டபிள்யு 190 விமானத்தில் மாதிரியாகும். விபத்து எதனால் ஏற்பட்டது என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.