இங்கிலாந்தில் 67 பீட்சா எக்ஸ்பிரஸ் ரெஸ்டாரண்ட்கள் மூட திட்டம்! – 1100 பேர் வேலை இழக்கும் அபாயம்

67 ரெஸ்டாரண்ட்களை மூட பீட்சா எக்ஸ்பிரஸ் திட்டம்! (Image: technicalsigns.co.uk)

இங்கிலாந்தில் 67 பீட்சா எக்ஸ்பிரஸ் உணவகத்தை மூட அந்த நிறுவனம் முடிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக 1100 பேர் வேலை வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் முன்னணி பீட்சா உணவு ரெஸ்டாரண்ட்களில் ஒன்று பீட்சா எக்ஸ்பிரஸ். இதற்கு இங்கிலாந்து முழுக்க 449 ரெஸ்டாரண்ட்கள் உள்ளன. இதில் 15 சதவிகிதத்தை அதாவது, 67 உணவகத்தை மூடுவது என்று அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கான நிர்வாக இயக்குநர் ஜோ பவுலி கூறுகையில், “67 நிறுவனங்கள் மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த முடிவு மிகக் கடினமான ஒன்றுதான். எதிர்பாராத வகையில் மிக மோசமான விற்பனை சரிவு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 9000 பேரின் வேலை வாய்ப்பு காப்பாற்றப்படும்.

எங்கள் தொழிலில் எங்களுக்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ளது. ஆனால் இங்கிலாந்தின் சமீபத்திய ஊரடங்கு இங்கிலாந்தின் உணவு விற்பனைத் துறை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது. நிறுவனத்தின் நிதி நிலையை மேம்படுத்த சில கடினமான முடிவு தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதன் ஒரு பகுதியாக மிகக் கடின உள்ளத்தோடு எங்கள் உணவகங்களில் ஒரு குறிப்பிட்ட அளவை மூடுவது என்று முடிவெடுத்துள்ளோம்” என்று கூறினார்.

இங்கிலாந்தில் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி ஊரடங்கு கொண்டு வரப்பட்டது. அப்போது பீட்சா எக்ஸ்பிரஸ் நிறுவனமும் மூடப்பட்டது. அதன் பிறகு சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் உணவகங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டன.

இருப்பினும் தொடர்ந்து பல சங்கிலித் தொடர் ரெஸ்டாரண்ட்கள், சூப்பர் மார்க்கெட், ஹோம் ஷாப்பிங் மையங்கள் தங்கள் கிளைகளை மூடுவதாக அறிவித்து வருகின்றன. இதனால், இங்கிலாந்தின் சேவைத் துறையில் பணியாற்றி வந்த பலரது வேலை வாய்ப்பு கேள்விக் குறியாகி வருகிறது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk