மூன்றடுக்கு கொரோனா கட்டுப்பாடு – எம்.பி-க்களுக்கு போரிஸ் ஜான்சன் விடுத்த அழைப்பு!

agrees publish data, கொரோனா, கட்டுப்பாடு
(Image: ft.com)

கொரோனா கட்டுப்பாட்டு அமல்படுத்தப்படுவது ஏன் என்பதற்கான புள்ளிவிவரங்களை வெளியிடத் தயார் என்பதால் எம்.பி-க்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு வருகிற 2ம் தேதியுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து மூன்றடுக்கு கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 70க்கும் மேற்பட்ட ஆளுங்கட்சி எம்.பி-க்கள் புதிய கட்டுப்பாட்டுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிப்பார்கள் என்று தெரிகிறது.

தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பது பற்றி லேபர் கட்சியும் இதுவரை அறிவிக்கவில்லை. இதனால், தன்னுடைய கட்சி எம்.பி-க்களை சமாதானம் செய்யும் வேலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் இறங்கியுள்ளார்.

பிரதமரின் கோரிக்கையை ஏற்க மறுத்த எம்.பி-க்கள் புதிய கட்டுப்பாடு ஏன் தேவை என்பதற்கான சுகாதார, பொருளாதார மற்றும் சமூகம் சார்ந்த புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இவற்றை விரைவில் வெளியிடுவதாகவும் அதற்கு முன்னதாக புதிய கட்டுப்பாட்டுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் கிடைக்க ஆதரவளிக்க வேண்டும் என்றும் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.

கிளர்ச்சி எம்.பி-க்களை சமாதானம் செய்ய பிரதமர் போரிஸ் ஜான்சன் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறார். முன்னதாக அவர் கிளர்ச்சி எம்.பி-க்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதில் பிப்ரவரி 3ம் தேதியுடன் புதிய கட்டுப்பாடு முறை முடிந்துவிடும் என்றும், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை புள்ளிவிவர தரவுகள் அடிப்படையில் கட்டுப்பாடு அடுக்கு நிலை மாற்றி அமைக்கப்படும் என்றும் கிறிஸ்துமசுக்கு முன்பாக டிசம்பர் 16ம் தேதி கட்டுப்பாடு அடுக்குகளை மாற்றி அமைப்பதற்கான பரிசீலனை கூட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பிபிசி-யிடம் பேசிய சுற்றுச்சூழல் செயலாளர் ஜார்ஜ் யூஸ்டிஸ், கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி-க்களுக்குள் குழப்பம் இருப்பதை ஒப்புக் கொண்டார். அதை சரி செய்ய பிரதமர் உழைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய கட்டுப்பாடு விதிகளுக்குஎதிராக லேபர் கட்சி வாக்களித்தால் ஆச்சரியப்படுவேன் என்றும், எந்த ஒரு கட்சியும் அரசியல் செய்வதற்கான தருணம் இது இல்லை என்றும் கூறியுள்ளார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter