கொரோனா பெருநோய்த் தொற்று தொடர்பாக சுதந்திர விசாரணை – போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

கொரோனா பெருநோய்த் தொற்று தொடர்பாக சுதந்திரமான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

கொரோனா நோய்த் தொடர்பாக பலரும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சர் எட் டேவி கொரோனா தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் அளித்த பதில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் டேவி பேசும்போது, “இந்த பிரதமரின் தலைமையின் கீழ் நாம் உலகின் மற்றும் ஐரோப்பாவின் மிக மோசமான இறப்பு விகிதம் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் மிக மோசமான இறப்பு விகிதத்தைப் பெற்றிருக்கிறோம். இந்த நோய்த் தொற்று பாதிப்பு தொடர்பாக உடனடியாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டிருந்தேன். ஆனால், இப்போது உத்தரவிட முடியாது என்று பிரதமர் அறிவித்துள்ளார். 2003ம் ஆண்டில் ஈராக் போர் தொடர்பாக போர் தொடங்கியதற்கு ஒரு மாதத்துக்குப் பிறகு சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று அப்போது அவர் வாக்களித்திருந்தார்.

கொரோனா தொற்று தொடர்பாக உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்றாலும், எதிர்காலத்தில் பொது விசாரணைக்கு உத்தரவிடப்படுமா?” என்று கேட்டார்.

இதற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் பதில் அளிக்கும்போது, “கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் விசாரணைக்காக அதிகமாக அதிகாரப்பூர்வ நேரத்தை செலவிட முடியாது. வரும் காலத்தில் கொரோனா நோய்த் தொற்று தொடர்பாக பாடங்களை கற்றுக் கொண்டும், அதன் பிறகு கொரோனா பெரும் நோய்த் தொற்றில் நடந்தது என்ன என்பது பற்றி சுதந்திரமான முறையில் ஆய்வு நடத்தப்படும்” என்றார்.