ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிஸ்டலில் பேரணி – 14 பேர் கைது!

Bristol arrest, பேரணி

ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிஸ்டலில் பிரம்மாண்ட பேரணி நடந்தது. 200-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். இதில் போலீசை தாக்கியது தொடர்பாக 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொரோனா பரவல் அதிகரிப்பைத் தொடர்ந்து டிசம்பர் 2ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்குக்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

ஊரடங்கு அமலுக்கு வந்த உடன் லண்டன் உள்ளிட்ட நகரங்களில் பேரணிகள் மற்றும் போராட்டங்கள் நடந்தன. இது தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் பிரிஸ்டனில் பேரணி ஒன்றுக்கு ஸ்டாண்ட் அப் பிரிஸ்டல் என்ற அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.

நகர மேயர் மார்வின் ரீஸ் ஆர்ப்பாட்டம் பேரணி போன்றவை வேண்டாம். அதற்கு பதில் பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனாலும், நகர மையத்தின் வழியாக அணிவகுத்து செல்ல 200க்கும் மேற்பட்டோர் கூடினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவர்கள்.

சமூக இடைவெளிப் பற்றி கவலையின்றி, மாஸ்க் அணியாமல் அவர்கள் ஒன்று கூடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவர் சுதந்திரம் வேண்டும் என்று தொடர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

ஊரடங்கு கொண்டு வரப்பட்டதன் நோக்கம், தடை மீறி பேரணி நடத்தினால் ஏற்படும் விளைவுகள் பற்றி போலீசார் அவர்களுக்கு விளக்கி கலைந்து செல்லும் படி கேட்டுக்கொண்டனர். இருப்பினும் பலரும் பேரணி செல்வது என்பதில் உறுதியாக இருந்தனர்.

கூட்டம் அதிகமாக கூடிக்கொண்டே சென்றதால் பிரச்னையைத் தவிர்க்க பேரணி செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனாலும் பேரணியில் பங்கேற்ற சிலர் போலீஸ் அதிகாரியை சிலர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பேரணியில் பங்கேற்ற 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீசாரின் உடலில் உள்ள கேமராக் காட்சிகள் அடிப்படையில் மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

மேலும் இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்தவர்களைக் கண்டறிந்து அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது என்று இன்ஸ்பெக்டர் ரனக்ரெஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter