கொரோனா பாதிப்பு காரணமாக லண்டன் பள்ளிகள் போல இங்கிலாந்தின் மற்ற பகுதிகளிலும் இரண்டு வாரங்களுக்கு தொடக்க நிலைப் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தற்போது வருகிற திங்கட்கிழமை பள்ளிகள் திறக்க வேண்டிய நாள் வந்துவிட்டது.
கொரோனா அதிகமாக உள்ளதால் திங்கட்கிழமை லண்டனில் உள்ள பள்ளிகள் திறக்கப்படாது என்று கல்வித்துறை செயலாளர் கவின் வில்லியம்சன் அறிவித்தார்.
நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடு அமல் படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், இந்த அறிவிப்பு மற்ற பகுதி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும், புதிய மாற்றம் அடைந்த கொரோனா இளம் வயதினர் மத்தியில் மிக வேகமாக பரவுகிறது என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில் இங்கிலாந்தின் மற்ற பகுதிகளில் பள்ளிகள் திறப்பது பற்றி அரசு யோசித்து செயல்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆசிரியர் கூட்டமைப்புகள் பள்ளிகள் திறக்கப்படக் கூடாது என்றும், பள்ளிக்கு வர ஆசிரியர்கள் மத்தியிலேயே அச்சம் உள்ளது என்றும், ஆன்லைன் வகுப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
லண்டன் தவிர்த்து மற்ற பகுதிகளில் திங்கட்கிழமை பள்ளிகள் திறந்த ஆக வேண்டும் என்று அரசின் முடிவு தொடர்பில் உள்ள பின்னணி விவரங்கள், புள்ளிவிவரங்களை அரசு வெளியிட வேண்டும் என்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பெற்றோர்கள் மத்தியில் அரசு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது என்று தொழிலாளர் கட்சியும் குற்றம்சாட்டியுள்ளது. நாடு முழுவதும் பள்ளிகளை சில வாரங்களுக்கு மூடுவது மட்டுமே ஒரே விவேகமான, நம்பகமான வழி என்று கட்சி தெரிவித்துள்ளது.
சட்ட நடவடிக்கை:
தி நேஷனல் எஜூகேஷன் யூனியன் (என்.இ.யு) நிர்வாகி இது குறித்து கூறுகையில், “அனைத்து தொடக்க நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளும் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருக்க வேண்டும்.
ஆசிரியர்கள் பள்ளிகளுக்குச் சென்று பணியாற்றுவதைத் தவிர்க்கும்படி நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்” என்றார்.
இதற்கிடையே லண்டன் தவிர்த்து மற்ற பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்படுவதை எதிர்த்து சட்ட ரீதியான நடவடிக்கையை தி அசோசியேஷன் ஆஃப் ஸ்கூல் அன்ட் காலேஜ் நிர்வாகிகள் எடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
புதிய மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் பள்ளிகள் திறப்பது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பதை அரசு விளக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் கல்வித் துறை செயலாளர் பொது அறிவை கொஞ்சம் பயன்படுத்த வேண்டும் என்றும் காட்டமாக விமர்சித்துள்ளது.
இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…