பிரஸ்டாடினில் பயங்கர தீவிபத்து… 80 வயது முதியவரைக் காப்பாற்றிய காப்பாற்றிய பெண்

வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீயில் சிக்கிய 80 வயது முதியவரை அருகில் வசிப்பவர்கள் மீட்ட சம்பவம் பிரஸ்டாடினில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலை 4.15 மணி அளவில் டென்பிங்ஷ்யர் பிரஸ்டாடினில் விக்டோரியா சாலையில் உள்ள ஒரு வீட்டின் மேல் பகுதியில் திடீரென்று தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. படுக்கை அறையில் பற்றிய தீ மளமளவென மற்ற அறைகளுக்கும் பரவியது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக செயல்பட்டு வீட்டில் இருந்த 80 வயது முதியவரை பத்திரமாக மீட்டனர். அவருக்கு புகை தொடர்பான சுவாச பிரச்னை மட்டுமே ஏற்பட்டது. அதிர்ஷடவசமாக தீக்காயம் ஏதும் இன்றி அவர் உயிர் தப்பினார். எலெக்ட்ரிக்கல் பிரச்னை காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தகவல் அறிந்ததும் வடக்கு வேல்ஸில் உள்ள தீயணைப்புத் துறை வாகனங்கள் அனைத்தும் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டன.

இது குறித்து தீயணைப்புத் துறையைச் சேர்ந்த டிம் ஓவன் கூறுகையில், “புகை, தீ அலாரம் அந்த வீட்டில் இருந்துள்ளது. அதனால் அந்த முதியவர் உயிர் தப்பினார். வீட்டின் மாடியில் தீப்பற்றியுள்ளது. முதியவர் வீட்டின் கீழ் தளத்திலிருந்துள்ளார். அலாரம் மட்டும் இல்லை என்றால் அவருக்கு தீவிபத்து ஏற்பட்டது தெரிந்திருக்காது.  உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். மின்சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தீ விபத்து ஏற்படலாம்” என்றார்.

சம்பவத்தை நேரில் கண்ட ஜெமி க்ளோவர் என்பவர் கூறுகையில், “அதிகாலை 4 மணி அளவில் தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது 50 வயது பெண் வீரத்துடன் உள்ளே சென்று 80 வயது முதியவரை வெளியே இழுத்து வந்தார். அந்த வீட்டில் அந்த முதியவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார்” என்றார்.

தீவிபத்து குறித்து தீயணைப்புத் துறையினர் கூறுகையில், “தீவிபத்து எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதால் அதை எதிர்கொள்ள எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். வீட்டில் ஸ்மோக் அலாரம் பொருத்த வேண்டும். அது சரியாக வேலை செய்கிறதா என்று அவ்வப்போது உறுதி செய்துகொள்ள வேண்டும். வீட்டில் தீவிபத்து ஏற்பட்டால் தப்பிப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி முன்கூட்டியே தயாரித்து வீட்டில் உள்ளவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இப்படி செய்தால் தீவிபத்தில் இருந்து உயிரைக் காப்பாற்றலாம்” என்றனர்.