கொரேனாவால் நஷ்டம்… மூடப்படும் 30க்கும் மேற்பட்ட Pret A Manger உணவகம்

கொரோனா காரணமாக மிகக் கடுமையான விற்பனை சரிவை கண்டதால் யு.கே -வில் Pret A Manger தன்னுடைய 30 அவுட்லெட்களை மூடுவது என்று முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்து, பிரான்ஸ், துபாய், சிங்கப்பூர் என பல நாடுகளில் பிரெத் என்று சுருக்கமாக அழைக்கப்படும் Pret A Manger உணவகம் பிரபலமாக உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக இங்கிலாந்தில் 30 உணவகங்களை மூடப்போவதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ரேப், சுஷி, கேக் உள்ளிட்ட துரித உணவுகள் விற்பனை செய்து வரும் ப்ரேத் நிறுவனத்துக்கு யுகே-வில் மட்டும் 410 அவுட்லெட்கள் உள்ளன. இதில் மிகக் கடுமையான வருவாய் இழப்பு காரணமாக 30 அவுட்லெட்கள் மூடப்பட உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக உணவு விற்பனை மிகக் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. மக்கள் வந்து உணவு வாங்குவதும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 74 சதவிகித விற்பனை குறைந்துள்ளது. அதனால், வேறு வழியின்றி 30 கடைகளை மூடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த 30 கடைகள் மூடப்படுவதன் மூலம் 1000 பேர் வேலை இழப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

தற்போது 410 கடைகளில் 339 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அப்படி இருந்தும் 74 சதவிகித விற்பனை சரி என்பது மிக மோசமானதாக கருதப்படுகிறது. உணவு விற்பனை சரிவிலிருந்து மீண்டு வருவது என்பது இங்கிலாந்தைப் பொருத்தவரை மிக மெதுவாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.

சாலை, துரித உணவுத் துறையில் கோலோச்சிக் கொண்டிருந்த பலரும் கடைகளை மூடிவிட்டு சென்றுவிட்டனர். இதனால் 24 ஆயிரம் வேலை வாய்ப்பு பறிபோனதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இது முடிவு இல்லை, சில்லரை விற்பனைத் துறையில் பணியாற்றி வரும் மேலும் 31,500 பேர் அபாய கட்டத்தில் உள்ளனர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.