முழு ஊரடங்கை நிராகரித்த போரிஸ் ஜான்சன்!

Boris Johnson
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போரிஸ் ஜான்சன்!

லண்டன், அக்டோபர் 12, 2020: நாடு முழுவதுக்குமான புதிய மூன்று நிலை ஊரடங்கு கட்டுப்பாடுகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். முழு ஊரடங்கை அவர் நிராகரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த போரிஸ் ஜான்சன், “முழு ஊரடங்கு யோசனையை நிராகரிப்பதாக அறிவித்தார்.

அப்படி முழு ஊரடங்கு கொண்டு வருவது நம்முடைய சமூகம் மற்றும் வாழ்க்கையை மூடுவதைப் போல் ஆகிவிடும்.

புதிய மூன்று நிலை ஊரடங்கு கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

புதிய கட்டுப்பாடுகள் தற்போது உள்ள விதிமுறைகளை எளிமைப்படுத்தி குழப்பங்களை போக்க உதவும்.

இது நாம் எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றிய கட்டுப்பாடுகள் இல்லை, நாம் மிகவும் கவனத்துடன் அடி எடுத்து வைக்க வேண்டிய குறுகிய பாதை.

தடுப்பூசி ஒரு நல்ல தீர்வாக அமையும் என்றாலும், அதை ‘எல்லாம் அது பார்த்துக்கொள்ளும்’ என்று அசட்டையாக விட்டுவிட முடியாது.

புதிய விதிமுறைகள் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி விவாதிக்கப்பட்டு நாளை நிறைவேற்றப்படும்.

நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்துவிட்டால் புதன்கிழமையே அவை நடைமுறைக்கு வரும்” என்றார்.

உள்ளுர் கட்டுப்பாடுகள் நடுத்தரமானவை, அதிகமானவை, மிக அதிகமானவை என்று மூன்றாக பிரிக்கப்படுகின்றன.

நடுத்தரமான கட்டுப்பாடுகள் (Medium):

நைட் கிளப் போன்ற தடை செய்யப்பட்டவை தவிர்த்து இங்கு எல்லா தொழில்களும் வழக்கம் போல செயல்படலாம்.

உணவு மற்றும் பானங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மூடப்பட வேண்டும்.

உணவகங்களில் உணவு அருந்தும் முறை இரவு 10 மணியுடன் முடிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் டேக்அவே, டெலிவரி போன்றவை செயல்பட அனுமதிக்கப்படும்.

பள்ளிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் வழக்கம் போல செயல்படலாம்.

திருமணம், இறுதிச் சடங்கு உள்ளிட்டவை கட்டுப்பாடுகளுடன், குறைந்த அளவிலான பார்வையாளர்கள் பங்கேற்புடன் செயல்படலாம்.

ஒழுங்கமைக்கப்பட்ட உள் விளையாட்டுக்கள், உடற்பயிற்சி வகுப்புகள் ஆறு பேர் விதிகளுக்கு உட்பட்டுச் செயல்படலாம்.

அதிக பாதிப்பு கட்டுப்பாடுகள் (High):

இது அதிக பரவல் உள்ள பகுதி என்பதால் இங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

மக்கள் தங்கள் வீட்டுக்கு வெளியே யாருடனும் சந்திப்பது கூடாது. எந்த ஒரு உட்புற அமைப்பிலோ, வீட்டிலோ, பொது இடங்களிலோ சந்திப்பு கூடாது.

வீட்டுத் தோட்டம் அல்லது எந்த ஒரு பிற இடங்களிலும் 6க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட குழு சந்திப்பு கூடாது.

மக்கள் தங்கள் வெளி பயணங்களை முடிந்த வரை குறைத்துக்கொள்ள வேண்டும். பொது போக்குவரத்தை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். வெளியே பயணம் செய்ய விரும்புகிறவர்கள் நடந்தோ, சைக்கிள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

கூட்ட நெரிசல் மிக்க நேரங்களில் பொது போக்குவரத்தை தவிர்க்க வேண்டும்.

உச்ச கட்ட பாதிப்பு (Very High) கட்டுப்பாடுகள்:

மிக உயர்ந்த தொற்று நோய் கொண்ட பகுதி. உள்ளூர் எச்சரிக்கை அடிப்படையில் இதை அரசு தீர்மானிக்கும். உள்ளூர் அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்து நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும்.

பப்கள், பார்கள் மூடப்பட வேண்டும். அவை ஒரு உணவகமாகச் செயல்படும் இடத்தில் மட்டுமே திறந்திருக்கலாம். அப்படி திறக்கும்போது உணவின் ஒரு பகுதியாக மட்டுமே மதுவை வழங்கலாம்.

சூப்பர் மார்க்கெட், ரெஸ்டாரண்ட், பள்ளி, பல்கலைக் கழகம், கல்லூரிகள் திறந்திருக்கும்.

திருமண வரவேற்புக்கு அனுமதி இல்லை.

மக்கள் வீட்டுக்கு வெளியே யாருடனும் சந்திக்கக் கூடாது. வீட்டுக்குள் வேறு ஒரு நபரை அனுமதிக்கக் கூடாது.

ஆறு பேர் விதிமுறைகள் பொது இடங்கள், பூங்கா, கடற்கரை என எல்லா இடத்துக்கும் பொருந்தும்.

மக்கள் தாங்கள் வசிக்கும் மிக அதிக பாதிப்பு உள்ள பகுதியை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். அல்லது வேறு யாரும் இங்கு நுழைவதையும் தவிர்க்க வேண்டும்.

யு.கே-வின் வேறு பகுதியைச் சார்ந்தவர்கள் மிக அதிக தொற்று உள்ள பகுதிகளில் இரவு தங்குவதை தவிர்க்க வேண்டும். அதே போல் மிக அதிக பாதிப்பு உள்ள பகுதிகளைச் சார்ந்தவர்களும் மற்ற இடங்களில் இரவில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

லிவர்பூலுக்கு 3ம் நிலை கட்டுப்பாடு!

புதிய அறிவிப்பின் படி, லிவர்பூலுக்கு மூன்றாம் நிலை கட்டுப்பாட்டுக்குள் விதிக்கப்பட்டுள்ளன.

நாட்டிங்ஹாம்ஷையருக்கு 2ம் நிலை கட்டுப்பாட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் மேற்கு ஷெயர், மான்செஸ்டர், பர்மிங்காம், லெய்செஸ்டர் உள்ளிட்டவற்றுக்கும் 2ம் நிலை கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter