நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப்படும் பப்கள்! -முன்பு போல இருக்காதாம்

லண்டனில் உள்ள பப் ஒன்றில் இளைஞர்கள்!

இங்கிலாந்தில் மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்போது பப்கள் திறக்கப்பட உள்ளன. முன்பு இருந்தது போன்று பப்கள் செயல்பட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பப்கள் கடந்த மார்ச் 20ம் தேதி மூடப்பட்டன. தற்போது இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு கொஞ்சம் கொஞ்மாக விலக்கிக்கொள்ளப்பட்டு வருகிறது. வருகிற சனிக்கிழமை முதல் பப்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பப்கள் திறக்கப்பட்டாலும் மார்ச் 20க்கு முன்பு இருந்தது போன்ற சூழ்நிலை தற்போது இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் பப்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமூக இடைவெளி அடிப்படையில் மேசைகள் அமைக்கப்பட்டு, வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பப் ஒன்றை நிர்வகித்து வரும் ஒருவர் கூறுகையில், “நீண்ட நாட்களுக்குப் பிறகு பப் திறக்கப்படுவதால் நான் பதற்றத்தில் உள்ளேன். முன்பு இருந்தது போல பப் இப்போது இருக்காது. ஆனால் எங்களால் முடிந்த அளவுக்கு மிகச்சிறந்த சேவையை வழங்க உள்ளோம். வாடிக்கையாளர்கள் எப்படி அதை ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது” என்றார்.

பெருந்தொற்று நோய் அபாயம் முற்றிலுமாக விலக்கிக்கொள்ளப்படவில்லை. அதனால், பப்களில் 50 சதவிகித வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் பப்கள் திறக்கப்படுவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பப்கள் இல்லாமல் இன்னும் ஆறு மாதம் ஒரு வருடம் கூட உயிர் வாழ முடியும். முதலில் கொரோனா முற்றிலும் ஒழிந்தது என்ற நிலையைக் கொண்டு வர வேண்டும். இல்லை என்றால் அதுவே கொரோனா பரவல் மையமாக மாறிவிடும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.

இங்கிலாந்தில் கொரோனா தொற்று நோய் காரணமாக 43,995 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தில்தான் உயிரிழப்பு அதிகம்.