குறைகிறதா சுய குவாரன்டைன் நாட்கள் எண்ணிக்கை?

quarantine, Covid, குவாரன்டைன்
(Image: Jonathan Brady/PA Wire)

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுய குவாரன்டைன் இருக்க வேண்டிய நாட்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கொரோனா தொற்று காரணமாக சுய குவாரன்டைனில் இருக்க வேண்டும் பரிந்துரைக்கப்படுபவர்களில் 10 சதவிகிதம் அளவுக்குத்தான் மக்கள் முழுமையாக குவாரன்டைனில் உள்ளனர். மற்றவர்கள் குவாரன்டைன் விதிகளை மீறி வெளியில் சுற்றுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தாங்கள் மிக நெருங்கிய அளவில் தொடர்பில் இல்லை என்ற நிலையிலும் தங்களை கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்கும்படி அதிகாரிகள் வலியுறுத்துவதாக பொது மக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால்தான் அதிக அளவில் குவாரன்டைன் விதிகள் மீறப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கான குவாரன்டைன் நாட்களைக் குறைக்க அரசு திட்டமிட்டு வருவதாக கன்சர்வேடிவ் கட்சி எம்.பி சர் பெர்னார்ட் ஜென்கின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெலிகிராஃப் இதழில் அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கொரோனா டெஸ்ட் முடிவு மற்றும் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் உள்ளவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தலில் மிகப்பெரிய தாமதம் உள்ளது. இப்படித் தனிமைப் படுத்தப்படுபவர்கள் குவாரன்டைன் விதிமுறைகளை முறையாக பின்பற்றுவது இல்லை.

14 நாட்கள் குவாரன்டைன் என்பது அவர்களுக்கு பிரச்னையாக உள்ளது. எனவே, அதை 10 அல்லது ஏழு நாட்களாக குறைக்க அரசு திட்டமிட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே வடக்கு அயர்லாந்து அமைச்சர் பிராண்டன் லூயிசும் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பிபிசி ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இது தொடர்பாக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இது பற்றி விஞ்ஞானிகள் குழு பரிந்துரைகள் அடிப்படையில் முடிவெடுக்கப்படும்” என்றார்.

அரசாங்கத்தின் அவசரநிலைக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பேராசிரியர் சர் இயன் டயமண்ட் “இதற்கான ஆய்வுகள் மற்றும் செயல்முறைகள் நடந்து கொண்டிருக்கின்றன” என்று கூறியுள்ளார்.

தற்போது கொரோனா தொற்று உறுதியான நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் 14 நாள் சுய குவாரன்டைன் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.

ஒருவர் நேருக்கு நேராக மிக நெருக்கமாகத் தொடர்புகொள்ளும் அளவில் பழக்கம் உள்ளவர்கள், குறைந்தது 15 நிமிடங்கள் தொற்று உள்ளவர்களுடன் ஒன்றாக இருந்தவர்கள் குவாரன்டைனில் இருக்க வேண்டும்.

குவாரன்டைனில் இருக்கும்போது அவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும். 14 நாட்களுக்கு அவர்களுக்கு தொற்று அறிகுறி தென்படவில்லை என்றால் அவர்கள் குவரான்டைனில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.

கொரோனா நோயாளிகளுடன் நெருங்கியத் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவதற்காகவே 20 ஆயிரம் டிராக்கர்களை அரசுப் பணியில் அமர்த்தியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter