75 நாடுகளிலிருந்து இங்கிலாந்து வருபவர்களுக்கான குவாரன்டைன் விதிகள் முடிவுக்கு வந்தன!

உலகின் 75 நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு வருபவர்களுக்கு இதுவரை இருந்த சுய தனிமைப்படுத்தல் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அதே நேரத்தில் ஸ்பெயினில் இருந்து ஸ்காட்லாந்துக்கு வருபவர்களுக்கு 14 நாள் குவாரன்டைன் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், இங்கிலாந்துக்கு வரும் பயணிகள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு ஆளாக வேண்டும் என்ற நிபத்தணையுடன் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இங்கிலாந்திலும், பல வெளிநாடுகளிலும் நாடுகளில் கொரோனா வைரஸ் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால், 14 நாள் சுய தனிமைப்படுத்தல் தேவையில்லை என்ற கருத்து எழுந்தது.

இதைத் தொடர்ந்து ஃபிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு குவரான்டைன் விதிகள் பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டது. இதன் படி இன்று முதல் குறிப்பிட்ட 75 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு குவாரன்டைன் விதிகள் பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு வருபவர்கள் இரண்டு வாரம் கட்டாய குவாரன்டைன் செய்துகொள்வது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விமான பயணிகள் கூறுகையில், வேலை தொடர்பான காரணங்களுக்காக குறுகிய காலத்துக்கு இங்கிலாந்துக்கு வர வேண்டியுள்ளது. அப்படி இங்கிலாந்து வந்தால் இரண்டு வாரம் குவாரன்டைனில் இருக்க வேண்டும் என்ற விதி சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனால் இனி பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு குவாரன்டைன் தேவையில்லை என்பது நிம்மதியைத் தருகிறது என்றனர்.

எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் படித்து வரும் 21 வயது மாணவர் பெர்ஜின் கூறுகையில், அரசின் புது அறிவிப்பு உற்சாகத்தை தந்துள்ளது. இதன் மூலம் ஸ்விச்சர்லாந்தில் உள்ள என்னுடைய காதலியை சந்தித்துவிட்டு திரும்ப முடியும். ஐந்து மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் அவரை சந்திக்க செல்ல உள்ளேன்” என்றார்.

அதே நேரத்தில் சுகாதார பணியாளர்கள் இந்த முடிவு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் 48 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். 513 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது அரசின் அறிவிப்பில் தெளிவற்ற நிலை உள்ளது. இந்த தெளிவற்ற நிலையானது பிரச்னையை மேலும் ஆழமாக்குகிறது. விமானத்தில் 170 பேருடன் பயணம் மேற்கொள்கிறோம். அவர்களில் யாருக்கும் கொரோனா இல்லை என்று உறுதியாக கூற முடியாத நிலையில் இது போன்ற அறிவிப்புகள் பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது என்றார்.