கொரோனா கட்டுப்பாடு இன்னும் கடினமாகலாம்! – போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

Johnson, Christmas, celebrations, கொரோனா
(File Photo)

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு மேலும் கடினமாகலாம் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் இரண்டாம் அலை கொரோனா பரவல் மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதி மூன்று மற்றும் நான்காம் நிலை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

கட்டுப்பாடுகள் அதிகரித்துக்கொண்டே சென்றாலும் கொரோனா பரவல் குறையவில்லை. புதிய வீரியம் மிக்க கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து வயதினர் மத்தியிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசு இன்னும் அதிக கட்டுப்பாட்டைக் கொண்டு வர வேண்டும். கொரோனா பரவலைத் தடுக்க இப்போது எதுவும் செய்யவில்லை என்றால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த சூழலில் பிபிசி-க்கு பேட்டி அளித்த பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு கடுமையாக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.

வரும் வாரங்களில் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள கடும் நடவடிக்கை தேவைப்படும் பகுதிகளில் மட்டும் மிகக் கடுமையான கட்டுப்பாடு கொண்டுவரப்படும்.

பள்ளிகள் மூடப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதை மறுக்க முடியாது. ஆனால், அப்படி செயல்பட உண்மையில் எங்கள் அரசு விரும்பவில்லை.

ஆனால், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கட்டுப்படுத்த எதை செய்ய வேண்டுமோ அதைத் துளியும் சமரசம் இன்றி செய்வோம். இது நமக்கு மிகவும் கடினமான காலம்.

அதிக அளவில் தடுப்பூசி போடப்படும் போது கொரோனா பரவல் வாய்ப்பு குறைந்துவிடும். அடுத்த மூன்று மாதங்களில் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுவிடும்” என்றார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கிறிஸ்துமஸ் சமயத்தில் பல கோடி மக்கள் நான்காம் நிலை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டனர். ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்ஸில் முழு ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இருப்பினும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தைச் சந்தித்து வருகிறது. இந்த சூழலில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளை (திங்கட்கிழமை) கூடி முடிவெடுக்கப்படும் என்று ஸ்காட்லாந்து முதல்வர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter