வேலை பாதுகாப்புக்கான புதிய திட்டத்தை அறிவித்த ரிஷி சுனக்!

Rishi Sunak, ரிஷி சுனக்
ரிஷி சுனக் (கோப்பு புகைப்படம்)

லண்டன், செப்டம்பர் 24, 2020: குளிர் காலத்தில் கொரோனா பரவல் புதிய உச்சத்தைத் தொடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேலை பாதுகாப்புக்கான புதிய திட்டங்களை (Jobs Support Scheme) நிதித்துறை வேந்தர் ரிஷி சுனக் (Rishi Sunak) இன்று வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் அக்டோபரில் கொரோனா புதிய உச்சத்தை எட்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது ஒரு நாளைக்கு 6000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

வீட்டில் இருந்து வேலை செய்ய மக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் சேவைத் துறை மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

பலரும் வேலை இழப்பை சந்திக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

பொருளாதார பாதிப்பைத் தவிர்க்க, வேலை பாதுகாப்பை உறுதி செய்வதற்கான புதிய திட்டங்களை வேந்தர் ரிஷி சுனக் வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் மூன்று மில்லியன் தொழிலாளர்கள் தற்போது பகுதி அல்லது முழு நேர கட்டாய விடுப்பில் உள்ளனர்.

அவர்களுக்கு ஊதிய இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க அரசு உதவி வருகிறது.

ஊழியர்களுக்கு ஏற்படக் கூடிய நிதி இழப்பை மாதத்துக்கு 2500 பவுண்ட் வரை அரசு செலுத்தி வருகிறது.

ஃபர்லோ திட்டம் வருகிற அக்டோபர் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் சுனக் வேலைவாய்ப்பு ஆதரவு திட்டம் என்ற புதிய திட்டத்தை இன்று அறிமுகம் செய்துள்ளார்.

இந்த புதிய திட்டம் நவம்பர் 1ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்பில்,

விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறைக்கான வாட் தள்ளுபடி அடுத்த ஆண்டு மார்ச் வரை தொடரும். இதன் மூலம் குறைந்த விலையிலான உணவுத் திட்டம் தொடரும்.

தொழிலகங்களுக்கான கொரோனா வைரஸ் அவசர கால கடன் உதவித் திட்டம் இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்படுகிறது.

இந்த கடனை 10 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தலாம்.

♦ கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் கஷ்டப்படும் தொழில் நிறுவனங்கள் வட்டியை மட்டும் கட்டலாம்.

♦ சுய வேலை வாய்ப்புக்கான நிதி உதவித் திட்டம் நீட்டிக்கப்படும்.

♦ நிறுவனங்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வாட் வரியை 11 மாதங்களில் பிரித்து செலுத்தலாம், இதற்கு வட்டி விதிக்கப்படாது” என்று கூறியுள்ளார்.

ரிஷி சுனக்கின் இந்த அறிவிப்பை பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பலரும் வரவேற்றுள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter