இப்போது நடவடிக்கை எடுக்காவிட்டால் கொரோனா மூன்றாம் அலை வாய்ப்பு அதிகரிக்கும்! – வெளியுறவுத் துறைச் செயலர் எச்சரிக்கை

Risk wave balance, கொரோனா

இங்கிலாந்தில் மூன்றடுக்கு ஊரடங்கு தற்போது கொண்டுவராவிட்டால் கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது என்று வெளியுறவுத் துறைச் செயலர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

வருகிற 2ம் தேதி கொரோனா முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மூன்றடுக்கு கட்டுப்பாடு கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான வாக்கெடுப்பு வருகிற செவ்வாய்க் கிழமை நடைபெறுகிறது.

லேபர் கட்சி தன்னுடைய நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை. ஆளும் கட்சிக்குள் கலகம் ஏற்பட்டுள்ளது. பல எம்.பி-க்கள் புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அமைச்சர்கள் இறங்கியுள்ளனர்.

பிப்ரவரி மாதத்துடன் கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுவிடும். அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இதே போல், அமைச்சர்கள் ஒவ்வொருவராக ஏன் புதிய கட்டுப்பாடு அவசியம் என்பதை விளக்கி பேட்டிகள், கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றனர்.

நேற்று அமைச்சர் மைக்கேல் கோவ் எழுதியிருந்த ஒரு கட்டுரையில், தற்போது மூன்றடுக்கு கட்டுப்பாடு கொண்டுவரப்படாவிட்டால் விரைவில் மருத்துவமனைகளுக்கு குவியும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் வெளியுறவுத் துறைச் செயலர் டொமினிக் ராப் கூறுகையில், “கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சமநிலை ஏற்படுத்தப்படாவிட்டால், கொரோனா மூன்றாம் அலை ஏற்படலாம்” என்று தெரிவித்துள்ளார்.

பிபிசி-க்கு அளித்த பேட்டியில் மூன்றாம் ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதா என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “அதைத் தவிர்ப்பதற்காக எங்களால் முடிந்த அனைத்து பணிகளையும் தீவிரமாக செய்து வருகிறோம்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter