ஏழே நிமிடத்தில் முடிவுக்கு வந்த எண்ணெய் கப்பல் கடத்தல் விவகாரம்… 7 பேர் கைது!

கடத்தல், கப்பல், arrested, hijacking
துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எண்ணெய் கப்பல். (Image: BBC / PA Media)

கடத்தப்பட்டதாக செய்தி பரவிய எண்ணெய் கப்பல் மீட்கப்பட்டது. பதுங்கியிருந்த ஏழு பேரை இங்கிலாந்து ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த பிரச்னை ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

நைஜீரியாவில் இருந்து சவுத்தாம்ப்டன் நகருக்கு வந்த எண்ணெய் கப்பலில் ஏழு பேர் கொண்ட குழு ரகசியமாக பதுங்கியிருப்பதை கப்பல் குழுவினர் கண்டறிந்தனர். அவர்கள் கடத்தல் காரர்களாக இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து கப்பலில் இருந்த பணியாளர்கள் அனைவரும் ஒரே அறையில் பாதுகாப்பாக பதுங்கிக் கொண்டனர்.  Isle of Wight பகுதியில் கப்பல் இருந்த நிலையில் ஏழு பேர் பற்றிய தகவல் துறைமுக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கப்பலைச் சுற்றி ஐந்து மைல் சுற்றளவுக்குப் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்த விவகாரம் குறித்து உள்விவகார செயலாளர் ப்ரீத்தி பட்டேலுடன் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் கடற்படை வீரர்கள் அதிரடியாக கப்பலுக்குள் நுழைந்தனர்.

நேற்று இரவு பிரிட்டிஷ் படைகள் நான்கு ராயல் கடற்படை ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் கப்பலில் இறங்கினர். அப்போதுதான் அந்த ஏழு பேரும் இங்கிலாந்தில் தஞ்சம் கோரியது பற்றித் தெரிந்தது.

ஏழே நிமிடத்தில் பிரிட்டிஷ் வீரர்கள் கப்பலைக் கைப்பற்றினர். 7 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு இங்கிலாந்தில் தஞ்சம் தருவது தொடர்பாக உறுதி மொழி அளிக்கப்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.

கப்பலில் இருந்த 22 ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஏழு பேரும் நைஜீரியாவைச் சார்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் விமான மற்றும் கடல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கப்பலைக் கைப்பற்றுதல் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவர்கள் ஏழு பேரும் ஹாம்ப்ஷயர் போலீஸ் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கப்பல் தற்போது சவுத்தாம்ப்டன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள ட்வீடில், “கப்பல் கடத்தல் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வாலஸ் மற்றும் உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேல் ஆகியோர் அளித்த அனுமதி அடிப்படையில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என்று கூறியுள்ளது.

ப்ரீத்தி பட்டேல் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர உதவிய அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

இதைப் படிச்சீங்களா: கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவதில் ஆர்வம் காட்டும் மக்கள்!

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter