தடுப்பூசி பற்றி பரப்பப்படும் தவறான தகவல்… அவசர சட்டம் கொண்டு வர தொழிலாளர் கட்சி வலியுறுத்தல்

கொரோனா, தடுப்பூசி, coronavirus vaccine, prevent, Stop anti vaccination, vaccine judged safe
கொரோனா தடுப்பூசி மாதிரி புகைப்படம்!

கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு பற்றி சமூக ஊடகங்களில் தொடர்ந்து பல தவறான தகவல் பரப்பப்பட்டு வருகின்றன. இப்படி தவறான தகவல் பரப்புகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கான சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று தொழிலாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி டிசம்பர் மாதம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி அளித்து கொரோனா பாதிப்பு மறைந்து இயல்புநிலைக்குத் திரும்ப ஓராண்டாகலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் சமூக ஊடகங்களில் “கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதாக இல்லை. எனவே, அதை போட்டுக்கொள்ள வேண்டாம்” என்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசி மட்டுமின்றி எந்த ஒரு தடுப்பூசியையும் போட்டுக் கொள்ள வேண்டாம், அதை புறக்கணிப்போம் என்றும் பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் விற்பனை தொழில் லாபத்தை அதிகரிக்கவே கொரோனா நோய் பரப்பப்பட்டதாகவும் சில பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இது மக்கள் மத்தியில் குழப்பத்தையும் நம்பகமின்மையையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இப்படி சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் அவசர சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று தொழிலாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மேலும், இது போன்ற குழப்பத்தை ஏற்படுத்தும் பதிவுகளை நீக்காமல் தொடர்ந்து பரவ அனுமதிக்கும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு மிகக் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

தடுப்பூசி பற்றி பகிரப்படும் தவறான தகவல்கள் மீது “ஃபால்ஸ், மிஸ்லீடிங், பார்ட்லி ஃபால்ஸ்” என்று பல திரைகள் போட்டு மறைக்கப்படுகின்றன.

ஆனால், தொடர்ந்து அவை சமூக ஊடகங்களில் இருக்கவும் பகிரவும் அனுமதிக்கப்படுகின்றன.

இப்படித் திரை போட்டு மறைக்கப்படுவதால் எந்த பலனும் இல்லை, அவற்றை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

தொழிலாளர் கட்சியின் நிழல் சுகாதாரத் துறை அமைச்சர் ஜோனத்தன் ஆஷ்வொர்த் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “மக்களிடம் பயத்தைத் தூண்டி அரசு மற்றும் நிறுவனங்களுக்கு எதிரான அவநம்பிக்கையை மற்றும் சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான தூண்டுதலை இது போன்ற பதிவுகள் உருவாக்குகின்றன.

மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும், தடுப்பூசி எடுத்துக்கொள்வதை ஊக்குவிக்கவும் எதிர்க்கட்சி என்ற வகையில் அரசுடன் இணைந்து செயல்படவே நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter